தமிழகம்

நகைக் கடை ஊழியர்களை தாக்கி 3 கிலோ தங்கம், ரூ.35 லட்சம் கொள்ளை: காஞ்சிபுரம் அருகே மர்ம நபர்கள் கைவரிசை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் அடுத்த செட்டியார் பேட்டை கிராமப்பகுதியில் நகைக்கடை ஊழியர்களை தாக்கி காரில் இருந்த 3 கிலோ தங்க நகை மற்றும் ரூ. 35 லட்சம் ரொக்கத்தை 5 பேர் கொண்ட மர்ம கும்பல் பறித்துச் சென்றது.

சென்னை, சவுக்கார்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் கமலேஷ். தங்க நகை மொத்த வியாபாரம் செய்துவருகிறார். சில்லறை வியா பாரிகளுக்கு, திங்கள்கிழமை தோறும் தங்க நகைகளை வழங்கி அதற்குரிய பணத்தை பெறுவது வழக்கம்.

இந்நிலையில், கமலேஷ் சில்லறை நகை வியாபாரிகளுக்கு தங்க நகை வழங்குவதற்காக, தனது உதவியாளர் காலேராம், ஊழியர் ராஜி மற்றும் ஓட்டுநர் ரவி ஆகி யோரை திங்கள்கிழமை வேலூ ருக்கு அனுப்பிவைத்தார். அவர்கள், வேலூர், ஆற்காடு பகுதிகளில் உள்ள 3 வியாபாரிகளுக்கு நகை கள் சப்ளை செய்துவிட்டு, காஞ்சி புரம் வந்தடைந்தனர். பின்னர், அங்குள்ள நகை வியாபாரிகளிடம் புதிய நகைகளை வழங்கிவிட்டு ஏற்கெனவே அளிக்கப்பட்ட நகைகளுக்கு உண்டான பணத்தைப் பெற்றுக்கொண்டு, காரில் சென்னை நோக்கி புறப்பட்டுச் சென்றனர். அப்போது, சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காஞ்சிபுரம் அடுத்த செட்டியார் பேட்டை கிராமப் பகுதியில் இருக் கும் காபி ஷாப்பில் காரை நிறுத்தி காபி சாப்பிட்டனர். பின்னர், அங்கி ருந்து புறப்பட தயாரானபோது, திடீரென காபி ஷாப்புக்கு வந்த காரில் இருந்து வெளியே வந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல், நகை கடை ஊழியர்களை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும், காரில் இருந்த 3 கிலோ தங்க நகை மற்றும் ரூ.35 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து அந்த மர்ம கும்பல் அங்கிருந்து காரில் தப்பிச்சென்றது.

இதுகுறித்து, தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுகா போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்த ஓட்டுநர் ரவி, உதவி யாளர் காலேராம் ஆகியோரை அரு கில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதித்தனர். நகை கடை ஊழியர் ராஜி மட்டும் காயமின்றி தப்பினார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.விஜயகுமார், சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும், உடனடியாக அனைத்து பகுதிகளிலும் வாகன சோதனை மேற்கொள்ள போலீஸாருக்கு உத்தரவிட்டார்.

நகைகடை ஊழியர்களை தாக்கி கொள்ளை சம்பவம் நடைபெற்ற காபி ஷாப்பின் முகப்பில், சி.சி.டி.வி., கேமரா பொருத்தப்பட்டிருந்தது. ஆனால், இந்த கேமரா சம்பவம் நடைபெறுவதற்கு சில மணி நேரத்துக்கு முன் ஏற்பட்ட பழுதின் காரணமாக வேலைசெய்யவில்லை என கூறப்படுகிறது.

மேலும், காஞ்சிபுரம் நகருக்குள் வந்த நகைக் கடை ஊழியர்கள், நகரத்தை விட்டு சில கிலோமீட்டர் தூரமே கடந்துவந்த நிலையில், ஆள்நடமாட்டம் குறைவாக உள்ள இடத்தில் பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் உள்ள காரை ஏன் இங்கு நிறுத்த வேண்டும் என்பது போன்ற பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளதால், கொள்ளை சம்பவம்குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT