கோவையில் உள்ள சில ரேஷன் கடைகளில் வாங்காத பொருட் களுக்கு எஸ்எம்எஸ் அனுப்பி விட்டு, அந்த பொருட்களை கள்ள சந்தையில் விற்பனையாளர்கள் விற்றுவிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை இலவசமாகவும், சர்க்கரை, பருப்பு, பாமாயில் உள்ளிட்டவை குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தைப் பொறுத்த வரை 10.04 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
முன்பு காகிதத்தில் இருந்த ரேஷன் கார்டுகளுக்கு பதில், தமிழகம் முழுவதும் கடந்த 2017-ல் ஆதார் எண் இணைக்கப்பட்ட ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட்டன. அதன்பிறகு, குடும்ப அட்டை தாரர்கள் பெற்றுக்கொள்ளும் பொருட்களின் விவரம், அளவு, விலை, மொத்த தொகை போன்ற விவரங்கள் உடனடியாக அவர் களது செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ரசீது வழங்கும் நடைமுறை தற்போது இல்லை. ரேஷன் கடை களில் நடைபெறும் முறைகேட்டை தடுக்கவே பொருட்கள் விற்பனை விவரம் எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படுகிறது. ஆனால், அதிலும், ஊழியர்கள் முறைகேடு செய்துவருவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இது தொடர்பாக கோவை மலுமிச்சம்பட்டியைச் சேர்ந்த தனலட்சுமி கூறியதாவது: ஜனவரி மாதம் நான் பாமாயில் வாங்க வில்லை. ஆனால், வாங்கியதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. மேலும், 10 கிலோ அரிசிதான் வழங்கினர். ஆனால், 25 கிலோ வாங்கியதாக எஸ்எம்எஸ் வந்துள்ளது. பெரும்பாலான மாதங்களில் இதே நிலைதான். ஆனால், பில்லில் மட்டும் 25 கிலோ வாங்கியதாக குறிப்பிடப்பட்டிருக்கும்.
கோதுமை வழங்குவதே இல்லை. இதுபோன்றுதான் பலருக் கும் எஸ்எம்எஸ் வந்துள்ளது. இதுதொடர்பாக விற்பனையாள ரிடம் கேட்டால், ‘மாத தொடக்கத் தில் நீங்கள் வர வேண்டும். இல்லையெனில், பொருட்கள் கிடைக்காது’ என்கிறார். வாங்காத பொருட்களை வைத்திருந்து அனைவருக்கும் வழங்கலாமே. எதற்காக முறைகேட்டில் ஈடுபட வேண்டும்.
மக்களுக்கு வழங்க வேண்டிய அரிசியை கடைக் காரர்களுக்கும், கேரளாவுக்கு அரிசி கடத்துவோருக்கும் விற் பனையாளர்கள் விற்றுவிடுகின் றனர். மண்ணெண்ணெய், பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்களை கள்ள சந்தையில் விற்கின்றனர்.
நடவடிக்கை தேவை
தவறு நடக்கக்கூடாது என்பதற்காக ஸ்மார்ட் கார்டு திட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், வழக்கம்போல ரேஷன் கடைகளில் முறைகேடுகள் தொடர்ந்து கொண் டேதான் இருக்கின்றன. முன்பு பொதுமக்களுக்கு தெரியாமல் இருந்தது. தற்போது எஸ்எம்எஸ் மூலம் முறைகேடு தெரிகிறது. இதுதொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புகார் தெரிவித்தால் நடவடிக்கை
ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் தொடர்பாக புகார்கள் இருந்தால் 1967 மற்றும் 1800-425-5901 ஆகிய இலவச தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு மக்கள் புகார் தெரிவிக்கலாம். PDS என டைப் செய்து இடைவெளிவிட்டு 107 என டைப்செய்து 99809 04040 என்ற எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பியும், www.tnpds.gov.in என்ற இணையதளத்திலும் புகார் தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உணவு வழங்கல் அதிகாரிகள் தெரிவித்தனர்.