தமிழகம்

அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையம் குடியரசு துணைத் தலைவர் இன்று திறந்து வைக்கிறார்

செய்திப்பிரிவு

அப்போலோ மருத்துவமனைகள் குழுமம் சார்பில் சென்னையில் அதிநவீன அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையம் இன்று திறக்கப்பட உள்ளது. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு திறந்துவைக்கிறார்.

இதுதொடர்பாக அப்போலோ மருத்துவமனைகள் குழும செயல் தலைவர் பிரதாப் சி.ரெட்டி சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

1993-ம் ஆண்டு சென்னையில் அப்போலோ புற்றுநோய் மருத்துவமனை திறக்கப்பட்டது. அதன் பின்னர் நாடு முழுவதும் 12 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.

தற்போது புற்றுநோய் மருத்துவமனை திறக்கப்பட்டதன் 25-வது ஆண்டை கொண்டாடுகிறோம். அதன் ஒரு கட்டமாக தெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக புற்றுநோய்க்கு அதிநவீன சிகிச்சை அளிக்க ‘அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மையம்’ சென்னை தரமணியில் அமைக்கப்பட்டுள்ளது. நாளை (ஜன.25) இந்த மையம் திறக்கப்படுகிறது.

விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்று மருத்துவமனையை திறந்து வைக்க உள்ளார். தமிழக முதல்வர் கே.பழனிசாமி, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.

இந்த மருத்துவமனை ரூ.1,300 கோடியில் கட்டப்பட்டுள்ளது. 150 படுக்கை வசதி கொண்டது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் தங்கி சிகிச்சை பெற, ஆகும் செலவை விட, இங்கு மிகவும் குறைவு.

அப்போலோ மருத்துவமனை சார்பில் 6,500 குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை இலவசமாக செய்யப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையில் பொருளாதாரத் தில் பின்தங்கியவர்களுக்கும் சிகிச்சை அளிக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது, அப்போலோ மருத்துவமனைகள் குழும துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி, இயக்குநர் சுனிதா ரெட்டி, அப்போலோ புற்றுநோய் மைய முதுநிலை புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் டி.ராஜா, அப்போலோ ப்ரோட்டான் புற்றுநோய் சிகிச்சை மைய துணைத் தலைவர் ஜான் சன்டி, இயக்குநர் ராகேஷ் ஜலாலி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT