தமிழகம்

ஜோலார்பேட்டை அருகே கழன்று ஓடிய சரக்கு ரயில் பெட்டிகள்

செய்திப்பிரிவு

சென்னை எண்ணூர் துறைமுகத்தில் இருந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்துக்கு நிலக்கரி ஏற்றிய சரக்கு ரயில் நேற்று முன்தினம் காலை வந்துகொண்டிருந்தது. 48 சரக்கு பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்த இந்த சரக்கு ரயில், நேற்று முன்தினம் இரவு ஜோலார்பேட்டை ரயில் நிலையத்துக்கு வந்தடைந்தது. அங்கேயே நிறுத்தப்பட்ட சரக்கு ரயில் நேற்று காலை 10.30 மணியளவில் மேட்டூர் நோக்கி புறப்பட்டது.

ஜோலார்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ரயில் நிலையத்துக்கு இடையில் சென்று கொண்டிருந்தபோது சரக்கு ரயிலின் 36 மற்றும் 37-வது சரக்கு பெட்டிகளை இணைக்கும் கொக்கிகள் திடீரென கழன்றது. இதனால், ரயில் பெட்டிகள் தனித்தனியாக ஓடியன. இதைப் பார்த்த சரக்கு ரயிலின் கார்டு வாக்கி டாக்கி மூலம் ரயில் இன்ஜின் ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சரக்கு ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது.

இந்த தகவலை அடுத்து சேலம் நோக்கிச் சென்ற ரயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன. ஜோலார்பேட்டையில் இருந்து விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் தனியாக கழன்ற பெட்டிகளை ஒன்றிணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்துக்குப் பிறகு பெட்டிகள் இணைக்கப்பட்டு அங்கிருந்து சரக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.

SCROLL FOR NEXT