வேலூர் வாணியம்பாடி அருகே ஆட்டோ மீது பேருந்து மோதிய சாலை விபத்தில் சிக்கியவர்களை அவ்வழியாக சென்ற அமைச்சர் நிலோபர் கபில் மீட்டு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார்.
இன்று காலை வாணியம்பாடியிலிருந்து வேலூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ள தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நீலோபர் கபில் சென்று கொண்டிருந்தார். அவர் செல்லும் வழியில் சற்று நேரத்திற்கு முன் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி கொணவட்டம் என்ற இடத்தில் அரசுப் பேருந்தும் ஆட்டோவும் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் ஆட்டோவை ஓட்டி வந்த மோகன் உட்பட 5 பேர் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்தவர்கள் சாலையில் கிடந்தனர். அவ்வழியாக வந்த அமைச்சர் நிலோபர் கபில் இதைப் பார்த்து காரை நிறுத்தச் சொல்லி இறங்கினார். விபத்தில் காயமடைந்தவர்களை சென்று பார்த்தார்.
பின்னர் தன்னுடன் பாதுகாப்புக்கு வந்த போலீஸார் உதவியுடன் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தி காயமடைந்தவர்களை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பிறகு அமைச்சர் நிலோபர் கபில் புறப்பட்டுச் சென்றார்.