மதுரையில் ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை சின்னசொக்கி குளத்தைச் சேர்ந்த ஜமால் முகமது ரியல் எஸ்டேட் அதிபர். மதுரை முரட்டன்பத்திரி பகுதியிலுள்ள இவரது நிலத்தை வாங்க சிலர் ஜமால்முகமதுவிடம் ரூ.35 லட்சம் முன்தொகை அளித்துள்ளனர், ஆனால், பதிவாளர் அலுவலகத் தில் பதிவுசெய்து தராமல் இழுத்தடித்தார்.
இந்நிலையில் கடந்த மாதம் 31-ம் தேதி முதல் ஜமால்முகமதுவைக் காணவில்லை என அவரது குடும்பத் தினர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தனர். அப்போது மதுரை முனிச்சாலையைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஜமால்முகமதுவை கொலை செய்ததாகக் கூறி, மேலூர் நீதிமன்றத்தில் கடந்த 6-ம் தேதி சரண் அடைந்தார்.
இதுகுறித்த விசாரணையில் ஜெயில் ரோட்டில் உள்ள ஒன்றரை ஏக்கர் நிலத்தை, அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் உள்ளிட்ட சிலரது பெயரில் பதிவுசெய்து தர மறுத்ததால் திருப்பரங்குன்றத்தை சேர்ந்த பூங்கொடி என்ற பெண் மூலம் பாலியல் ஆசை காட்டி ஜமால் முகமதுவை கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்ததைக் கண்டறிந்தனர்.
இதையடுத்து இந்த வழக்கு தொடர்பாக மேலும் சிலரை போலீஸார் கைது செய்திருந்தனர். இந்நிலையில், இந்தக் கொலையின் பின்னணியில் ஐ.பெரியசாமியின் குடும்பத்துக்கு தொடர்பு இருப்பதாக பல்வேறு அமைப்புகள் மதுரை ஆட்சியரிடம் மனு அளித்தனர். அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், ஜெயில் ரோட்டில் அலாவுதீன் அறக்கட்டளைக்கு சொந்தமாக உள்ள அந்த இடத்தின் 20 சென்ட் நிலத்தை ஐ.பெரியசாமியின் மகள் இந்திரா (35), உறவினர் பழனிவேலு(55), அவரது மனைவி உமாராணி(51) ஆகியோர் பெயரில் பதிவு செய்ய ஜமால்முகமதுவிடம் பத்திரத்தில் கையெழுத்து பெற்றிருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இவர்கள் மூவரையும் அழைத்து தல்லாகுளம் காவல் நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை விசாரணை நடத்தினர். அதில் ஜமால்முகமது கொலையில் இவர்களுக்கும் தொடர்பு இருந்ததாக தெரியவந்ததால் மூவரையும் கைது செய்தனர். அதன்பின் இந்திரா, பழனிவேலு, உமாராணி ஆகியோரை ஜே.எம்.2 நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அப்போது ஜமால்முகமதுவின் நிலத்தை அடையும் நோக்கில் சட்டவிரோதமாக கூடுதல், கூட்டுசதி, கடத்தல், கொலை ஆகிய பிரிவுகளின் கீழ் இந்திரா உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வரும் 7-ம் தேதி வரை 3 பேரையும் நீதிமன்றக் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் திரிவேணி உத்தரவிட்டார். இதையடுத்து இந்திரா, உமாராணி ஆகியோர் திருச்சி மகளிர் சிறையிலும், பழனிவேலு மதுரை மத்திய சிறையிலும் அடைக்கப் பட்டனர்.