வங்கியில் கொள்ளையடிக்க பயன்படுத்துவதற்காக திருச்சி சங்கிலியாண்டபுரத்திலுள்ள ஒரு கடையிலிருந்து சிலிண்டர் திருடிச் சென்றது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதை எடுத்துச் செல்வதற்காக ஆட்டோவையும் கடத்திச் சென்றிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
திருச்சி சமயபுரம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் சுவரில் கடந்த 27-ம் தேதி இரவு மர்ம நபர்கள் துளையிட்டு நகைகள், பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். தகவலறிந்த போலீஸார் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கொள்ளையர்கள் தப்பிச் சென்றபோது சிதறிய 40 பவுன் நகைகள், ரூ.1.74 லட்சம் ரொக்கத்தை மீட்டனர். மேலும் கொள்ளை நடைபெற்ற இடத்திலிருந்து சிலிண்டர், டியூப், கட்டர், முகமூடி, கையுறை போன்றவற்றையும் பறிமுதல் செய்தனர். அதைத்தொடர்ந்து, வங்கியிலிருந்து 470 பவுன் நகைகள், ரூ.19 லட்சம் கொள்ளை போனதாக கொள்ளிடம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இச்செயலில் ஈடுபட்ட கும்பலை கைது செய்ய 5 தனிப்படை அமைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொள்ளையர்கள் பயன்படுத்திய சிலிண்டர், சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரிலுள்ள இரும்பு கடையில் இருந்து திருடப்பட்டது தெரிய வந்தது. இதுகுறித்து, அந்த கடையின் உரிமையாளர் ஹபீப் ரகுமான் அளித்த புகாரின்பேரில், பாலக்கரை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற் கொண்டுள்ளனர். அதேபோல, கடந்த 27-ம் தேதி இரவு சங்கிலி யாண்டபுரம் தெரசம்மாள் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த சங்கிலிமுத்து(35) என்பவரின் ஆட்டோவையும் மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர். இதன் பின்னணியிலும், வங்கி கொள்ளையில் ஈடுபட்டவர்கள் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதுகுறித்து போலீஸார் கூறும்போது, ‘‘கொள்ளையர்கள் பயன்படுத்திய சிலிண்டர், சங்கிலியாண்டபுரத்தில் உள்ள ஹபீப் ரகுமான் கடையில் திருடப் பட்டது உறுதியாகிவிட்டது. இது தொடர்பாக எஸ்.பி ஜியாவுல் ஹக் நேரில் அந்த கடைக்கு சென்று அதன் உரிமையாளரிடம் விசாரணை நடத்தினார். அப்போது, கடந்த 25-ம் தேதி இரவு 2 சிலிண்டர்களை வெளியிலேயே வைத்துவிட்டு கடையை பூட்டிச் சென்றதாகவும், 28-ம் தேதி மீண்டும் கடைக்கு வந்து பார்த்தபோது ஒரு சிலிண்டரை காணவில்லை எனவும் கடை உரிமையாளர் தெரிவித் துள்ளார். அந்த சிலிண்டரை எடுத்துச் செல்வதற்காக முன்னாள் அமைச்சர் மரியம்பிச்சையின் வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த சங்கிலிமுத்துவின் ஆட்டோவை வங்கி கொள்ளையர்கள் திருடியி ருக்கலாம் என சந்தேகம் எழுந் துள்ளது.
இதுதொடர்பாக அந்தப் பகுதியில் இருந்த அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்து வருகிறோம். அதில், கடந்த 27-ம் தேதி இரவு, ஆட்டோவை ஒரு நபர் மிக வேகமாக ஓட்டிச் செல்லும் காட்சிகள் பதிவாகி யுள்ளன. இதுகுறித்து விசாரித்து வருகிறோம்’’ என்றனர்.
இதற்கிடையே, கடந்த 27-ம் தேதியன்று பஞ்சாப் நேஷனல் வங்கி அமைந்துள்ள பகுதியில் இரவு ரோந்து செல்வதில் மெத்தனம் காட்டியதாக கூறி கொள்ளிடம் காவல்நிலைய எழுத்தர் சகாயராஜை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்.பி ஜியாவுல் ஹக் உத்தரவிட்டுள்ளார்.