கோடநாடு சம்பவம் தொடர்பாக முதல்வருக்கு எதிராக ஆவணப்படம் வெளியிட்டதாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்துள்ள உயர் நீதிமன்றம், இது தொடர்பாக போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு பங்களாவில் கடந்த 2017-ம் ஆண்டு நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களின் பின்னணியில் முதல்வர் கே.பழனிசாமி இருப்பதாக தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியரும், நாரதா ஆன்லைன் நிறுவன ஆசிரியருமான மேத்யூஸ் சாமுவேல் சமீபத்தில் ஆவணப் படம் வெளியிட்டார்.
இதையடுத்து முதல்வரின் புகழுக்குகளங்கம் ஏற்படுத்த முயற்சிப்பதாக அதிமுக தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின்பேரில் மேத்யூஸ் சாமுவேல் ஷயான், மனோஜ் உள்ளிட்டோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.
தனக்கு எதிரான இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மேத்யூஸ் சாமுவேல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை, கடந்த 25-ம் தேதி நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக நடந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக் கறிஞர் என்.ஆர்.இளங்கோவும், அரசு தரப்பில் மாநில தலைமை அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜனும் விரிவாக வாதிட் டனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனுவை விசாரணைக்கு ஏற்பதா, இல்லையா என்பது குறித்து ஜன.29-ல் உத்தரவிடப்படும் என தெரிவித்து இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி முன்பாக நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, ‘‘இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க முகாந்திரம் உள்ளது. எனவே இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 4 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும். அதுவரை வழக்கு விசாரணைக்கு இடைக் காலத் தடை விதிக்கப் படுகிறது’’ என உத்தர விட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.