கோடநாடு சம்பவம் தொடர்பாக முதல்வர் பழனிசாமிக்கு எதிராக சிபிஐ விசாரணை கோரி டிராஃபிக் ராமசாமி தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலரான டிராஃபிக் ராமசாமி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்ததாவது:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஏப்ரல் 24-ல் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பாக ஷயான், மனோஜ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டவர் களை போலீஸார் கைது செய்தனர். இச்சம்பவத்தையடுத்து ஜெயலலிதாவின் கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ், ஷயானின் மனைவி, குழந்தை உட்பட 5 பேர் மர்மமான முறையில் இறந்துள்ளனர்.
இந்நிலையில், தெஹல்கா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல், ஷயான், மனோஜ் ஆகியோர் இந்த சம்பவங் களின் பின்புலத்தில் முதல்வர் கே.பழனிசாமி இருப்பதாக குற்றம் சாட்டி ஆவணப்படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இதனடிப்படையில் அவர்கள் மீது தமிழக போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக முதல்வர் மீது நேரடியாக பகிரங்க குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான சாட்சியங் களையும், ஆவணங்களையும் அழிக்க தமிழக போலீஸார் முயற் சித்து வருகின்றனர். குற்றச்சாட்டு முதல்வருக்கு எதிராக உள்ள தால் இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதி கண்ணா ஆகியோரைக் கொண்ட அமர்வில் நேற்று நடந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘கோடநாடு சம்பவம் தொடர்பாக சிலர் தமிழக முதல்வர் மீது குற்றம் சாட்டியுள்ளனர். அந்த குற்றச்சாட்டுகளை மறுத்து போலீஸ் விசாரணைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மீது மனுதாரர் கூறும் குற்றச் சாட்டுகளுக்கு ஆரம்பகட்ட முகாந் திரம் எதுவும் இல்லை. ஊடகங்களில் வந்த செய்திகளின் அடிப்படையில் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். கோடநாடு சம்பவத்துக்கும், தற்போதைய முதல்வருக்கு எதிராக குற்றம் சாட்டுபவர்களுக்கும் என்ன தொடர்பு உள்ளது என்றும் தெரியவில்லை. எனவே, இந்தச் சூழலில் இந்த வழக்கை நாங்கள் விசாரணைக்கு ஏற்க தயாராக இல்லை’’என்றனர்.
அப்போது டிராஃபிக் ராமசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி, வழக்கை வாபஸ் பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
அதற்கு நீதிபதிகள், ‘‘வாபஸ் பெற அனுமதித்தால் அது மேலும் குழப்பத்தை ஏற்படுத்திவிடும்’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.