திருவாரூர் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள செய்யப்பட்டுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரியின் மகன் துரை தயாநிதி திமுகவை மறைமுகமாகச் சாடி ட்வீட் செய்துள்ளார்.
இது தொடர்பாக அவர், "நீங்கள் ஒரு விஷயத்தில் நம்பிக்கை வைத்திருந்தீர்கள் என்றால் துணிந்து போராடுங்கள்... நீங்கள் வெற்றி பெறுவீர்களா அல்லது தோல்வி பெறுவீர்களா என்பதெல்லாம் நீங்கள் போட்டியை எதிர்கொண்ட பிறகுதான் தெரியும். ஆனால், இங்கே சிலர் போட்டியை எதிர்கொள்ளவே துணிவில்லாமல் அச்சமடைகின்றனரே" எனப் பதிவிட்டிருக்கிறார்.
#Thiruvarur என்ற ஹேஷ்டேக் கீழ் இதனைப் பதிவிட்டிருக்கிறார்.
இந்தக் கருத்துக்குப் பின்னூட்டமாக பலரும் திருவாரூரில் அழகிரி சுயேட்சையாக நிற்கலாமே என்று யோசனை தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுகவில் இணைய பலமுறை விருப்பம் தெரிவித்தும்கூட அழகிரி கட்சியில் இணைக்கப்படாத நிலையில் தேர்தல் ரத்து குறித்து துரை தயாநிதியின் இந்த ட்வீட் அரசியல் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.
தேர்தலை எதிர்கொள்ளும்போதுதான் திமுகவுக்கு எனது பலம் தெரியும் என்று அழகிரி பலமுறை தனது பேட்டிகளில் வலியுறுத்தியிருப்பதும் கவனிக்கத்தக்கது.
ரத்தை வரவேற்ற ஸ்டாலின்:
இதற்கிடையில், திருவாரூர் இடைத் தேர்தல் ரத்து செய்யப்பட்டதை வரவேற்பதாக ஸ்டாலின் கூறியிருந்தார். "தேர்தல் ஆணையத்தின் முடிவு சரியானது. நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து 20 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டும்.
ஒரே நாளில் அனைத்து தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்த வேண்டும். திருவாரூருக்கு மட்டும் தேர்தல் அறிவித்தது உள்நோக்கம் இருந்தது. அப்போதே இந்த அறிவிப்பு பல சர்ச்சைகளை எழுப்பி இருந்தது.
புயல் நிவாரணப் பணி முடிவடையாத நிலையில் தேர்தல் நடந்தால் மக்கள் அதிருப்தியடைவர். தேர்தலில் வெற்றி பெறுவதைவிட, நிவாரணப் பணிகள் தடைபடக்கூடாது என்பது முக்கியம்" என்று ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.