தமிழகம்

‘கடைசி வரை என் ஆசை நிறைவேறவில்லையே’-கருணாநிதியை நினைத்து பேரவையில் கதறி அழுத துரைமுருகன்

செய்திப்பிரிவு

சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய துரைமுருகன், ‘‘கடைசிவரை என் ஆசை நிறைவேறவில்லையே’’ என கதறி அழுதார்.

சட்டப்பேரவையில் கருணாநிதி மறைவுக்கு கொண்டு வரப்பட்ட இரங்கல் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன் பேசியதாவது:

கருணாநிதி தனி மனிதரல்ல. அவர் பன்முகத்தோற்றம் கொண்டவர். இந்த பேரவையை பொறுத் தவரை அவர் எல் லாமுமாகி இருந் தவர். எங்கள் தலைவர் மொத் தம் வாழ்ந்தது 34,258 நாட்கள். அதாவது 95 ஆண்டுகள். அவர் சட்டப்பேரவையில் பணியாற்றியது 20,411 நாட்கள். அதாவது 56 ஆண்டுகள். தன் வாழ்நாளில் பாதிக்கு மேல் இந்த அவையில் பணியாற்றியுள்ளார். 13 தேர்தல் களில் நின்று வென்றவர். எதிர்க் கட்சி உறுப்பினர், கொறடா, தலை வராக, அமைச்சராக, முதல்வராக இந்த அவையில் பணியாற்றியுள் ளார். அவரது வாழ்க்கை முழு வதும் மக்களோடு ஒன்றி இருந் துள்ளார்.

ஒருவர் எவ்வளவு நாள் வாழ்ந்தார் என்பதல்ல முக்கியம். அவர் வாழ்ந்த காலத்தில் என்ன சாதித்தார் என்பதுதான் முக்கியம். எங்கள் தலைவர் வரலாற்றுச் சிறப்புமிக்க பல காரியங்களை செய்துள்ளார். மதராஸ் என்பதை சென்னை என பெயர் மாற்றியிருக்கிறார். ஆகஸ்ட் 15-ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களும் தேசிய கொடியை ஏற்றும் உரிமையை பெற்றுத்தந்தார். எம்ஜிஆர் முதல்வராக கோட்டையில் கொடியேற்றியபோது, இதை நினைவுகூர்ந்து நன்றி தெரிவித்தார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து பெற்றுத்தந்தார். இந்த மண் உள்ளவரை தமிழ் இருக்கும். தமிழ் மக்கள் இருப்பார்கள். தமிழ் மொழி இருக்கும்வரை அதற்கு செம்மொழி என்ற பெயர் இருக்கும். அந்த பெயர் இருக்கும் வரை எங்கள் தலைவர் பெயரும் இருக்கும்.

மாநில சுயாட்சியை நாடு முழுவதும் கொண்டு சேர்த்தார். பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு கொண்டு வந்தார். உயர் நீதிமன்றம் தொடங்கிய 125 ஆண்டுகளில், ஒரு தாழ்த்தப்பட்டவர்கூட நீதிபதியாக இருந்ததில்லை. இதை மாற்றி ஜோலார்பேட்டையில் இருந்து வரதராஜனை கொண்டு வந்து நீதிபதியாக்கினார். அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்றார். பேருந்துகளை தேசிய மயமாக்கினார். மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளத்தை உயர்த்தினார்.

குடியரசுத் தலைவர், பிரதமரை இங்கிருந்தபடியே சுட்டிக்காட்டியவர். மாநில கட்சித்தலைவராக இருந்தாலும், அகில இந்திய அரசியலில் வித்தகராக இருந்ததால், அகில இந்திய தலைவராகவே கருதப்பட்டார். அதனால்தான் அவர் மறைந்தபோது நாடாளுமன்ற கட்டிடத்திலும், மாநிலங்களின் சட்டப்பேரவைகளிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறந்தது.

எனக்கு ஒரு ஆசை உண்டு. அந்த ஆசை 2007-ம் ஆண்டு நிறைவேறி இருக்க வேண்டும். பெற்றோர் எனக்கு ஒரு முறை உயிர் கொடுத்தனர். என் தலைவர் எனக்கு 2-வது முறையாக உயிர் கொடுத்தார். என் பிணத்தின் மீது தலைவரின் கண்ணீர் பட்டால் அதுவே நான் பெற்ற பேறு என்று நினைத்திருந்தேன். அப்போது நான் மறைந்திருந்தால் என் தலைவர் கண்ணீர் சிந்தியிருப்பார். ஆனால், துரதிருஷ்டம் எனது தலை வர் உடல் மீது நான் கண்ணீர் சிந்த வேண்டிய நிலை வந்துவிட்டதே. கடைசிவரை என் ஆசை நிறைவேறவில்லையே..’’ என்று கூறிய துரைமுருகன் சோகத்தை அடக்க முடியாமல் கதறி அழுதார்.

அப்போது, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலினும் திமுக உறுப்பினர்களும் கண் கலங்கினர். கதறி அழுத துரைமுருகனை மு.க.ஸ்டாலின் தேற்றினார். இதனால் அவையில் சில நிமிடங்கள் அமைதி நிலவியது.

தொடர்ந்து, சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.ஆர்.ராமசாமி பேசும்போது, ‘‘கருணாநிதியின் அரசியல் பயணம் குளித்தலையில் தொடங்கி சொந்த ஊரான திருவாரூரில் நிறைவு பெற்றுள்ளது. அவர் இன்னும் இருந்திருந்தால் தமிழகத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக இருந்திருக்கும்’’ என்றார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர் முகமது அபுபக்கர், கொங்கு இளைஞர் பேரவை தலைவர் கு.தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சியின் தமிமுன் அன்சாரி ஆகியோரும் இரங்கல் தீர்மானத்தின் மீது பேசினர்.

SCROLL FOR NEXT