ஆளுநர் உரையில் தமிழக அரசின் கொள்கை விவரங்கள் இல்லை. ஊழலை ஒழிப்பதில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை என லோக்ஆயுக்தாவை சுட்டிக் காட்டி எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி யுள்ளார்.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது பேர வையில் நேற்று நடந்த விவாதம்:
மு.க.ஸ்டாலின்: ஆளுநர் உரையில் அரசின் கொள்கை குறித்த விவரங்கள் இல்லை. மேகேதாட்டு விவகாரத்தில் தட்டிக் கேட்காமல், தடவிக் கொடுப்பது போல் ஆளுநர் உரையில் வாசகங்கள் உள்ளன. 52 பக்க ஆளுநர் அறிக்கை சம்பிரதாயமாக உள்ளது.
முதல்வர் பழனிசாமி: மேகே தாட்டு அணை கட்டக்கூடாது என்பது அனைவருடைய விருப்பம். அதை சுட்டிக்காட்டித்தான் நாடாளு மன்ற கூட்டம் நடைபெறாத அளவுக்கு நம் எம்பிக்கள் குரல் கொடுத்து வருகின்றனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்டுள்ளது. தமிழக அரசை பொறுத்தவரை விவசாயிகளுக்கும், தமிழக மக்களுக்கும் நன்மை கிடைக்கிறது என்றால் எதுவாக இருந்தாலும் மத்திய அரசுற்கு துணை நிற்போம். தமிழக மக்களுக்கு எதிராக எந்த திட்டம் கொண்டுவந்தாலும் அரசு எதிர்க்கும்.
மு.க.ஸ்டாலின்: முந்தைய உலக முதலீட்டாளர் மாநாட்டில் 98 ஒப்பந்தங்கள் போடப்பட்டதில், 61 நிறுவனங்கள் ரூ.62 ஆயிரத்து 738 கோடி முதலீடு செய்துள்ளன. மீதமுள்ள முதலீடுகள் என்ன வானது?
அமைச்சர் எம்.சி.சம்பத்: 98 ஒப்பந்தங்களில் தற்போது 64 நிறுவனங்கள் ரூ.67 ஆயிரத்து 367 கோடி முதலீடு செய்துள்ளன. 1 லட்சத்து 17 ஆயிரம் பேர் பணி வாய்ப்பு பெற்றுள்ளனர். தற் போது 27 நிறுவனங்கள் பணி களை தொடங்கியுள்ளன. 8 நிறுவ னங்கள் உற்பத்திக்கான முயற்சி களை எடுத்து வருகின்றன. 7 நிறு வனங்கள் தொழில் தொடங்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப் பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். வரும் உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடி முதலீடு செய்ய 50 நிறுவனங்கள் ஒப்புக் கொண்டுள்ளன.
அமைச்சர் பி.தங்கமணி: மின்துறையில் 1 லட்சத்து 6 ஆயிரம் கோடிக்கான முதலீட் டுக்கு ஒப்பந்தம் தற்போது டெண்டர் தொடர்பான சிக்கலால் நிலுவை யில் உள்ளது. அந்த முதலீடுகள் வந்திருந்தால் 75% முதலீடு களை பூர்த்தி செய்திருக்கலாம்.
மு.க.ஸ்டாலின்: ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தை பொறுத்த வரையில் அந்த ஆலையை மூட அரசாணை வெளியிட முடியாது. உடனடியாக அமைச்சரவையை கூட்டி ஸ்டெர்லைட் ஆலையை மூடுவது தொடர்பாக கொள்கை முடிவு எடுக்க வேண்டும்.
முதல்வர் பழனிசாமி: ஸ்டெர் லைட் ஆலையை மூட வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடு. அதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.
மு.க.ஸ்டாலின்: ஊழலை ஒழிக்க சுதந்திரமான அமைப்பான லோக் ஆயுக்தாவை அமைக்க அரசு தயக்கம் காட்டிவருகிறது. உச்ச நீதிமன்றம் ஜூலை 10-ம் தேதி கெடு விதித்த பின்னரே லோக் ஆயுக்தா தொடர்பான சட்ட முன்வடிவு பேரவையில் நிறைவேற்றப்பட்டது. மத்திய அரசு பிப்ரவரி மாதம் கெடு விதித்த பின்னரே தேர்வுக்குழு அமைக்கப் பட்டுள்ளது. லோக் ஆயுக்தாவை அதிகாரமில்லாத அமைப்பாக ஆக்க முயற்சிப்பதால் அதுதொடர் பான ஆலோசனை கூட்டத்துக்கு நான் செல்லவில்லை. ஊழலை ஒழிக்க இந்த அரசுக்கு அக்கறை இல்லை.
இவ்வாறு விவாதம் நடந்தது