தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டத்தின் கடைக்கோடி மலைகிராமமான மூங்கில் பள்ளம் கிராமத்திற்கு ஏழு கிலோ மீட்டர் தூரம் 3 மணி நேரம் நடந்து காட்டாறுகளைக் கடந்து சென்று அங்கு வசிக்கும் பழங்குடி பளியர் இன மக்களின் குறைகளை திண்டுக்கல் ஆட்சியர் டி.ஜி.வினய் கேட்டறிந்தார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி மன்னவனூர் ஊராட்சியில் உள்ளது மாவட்டத்தின் கடைக்கோடி கிராமம் மூங்கில்பள்ளம். இந்தக் கிராமத்தை அடுத்து கேரள மாநில எல்லை தொடங்குகிறது. இந்த கிராமத்திற்கு மன்னவனூரில் இருந்து செல்வதற்கு செங்குத்தான மலைப்பாதையில் இறங்க வேண்டும். மற்றொரு வழியான திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை சென்று அங்கிருந்து மஞ்சம்பட்டி வரை காரில் சென்று பின்னர் மூங்கில்பள்ளத்திற்கு ஏழு கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும். இந்தப் பகுதிக்கு காட்டாறு, பாறைகள் அடங்கிய மலைப்பகுதி மற்றும் வனப்பகுதிகளைக் கடக்கவேண்டும்.
நேற்று முன்தினம் (புதன்கிழமை) திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், திருப்பூர் மாவட்டம் வழியாக உலுவக்காடு, மூங்கில்பள்ளம் கிராமத்திற்கு ஆதிவாசிகளின் குறைகளைக் கேட்டறிய பயணித்தார். இவருடன் வனத்துறையினர், வருவாய் அலுவலர்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் குறைந்த எண்ணிக்கையில் உடன் சென்றனர்.
மஞ்சம்பட்டியில் இருந்து இரண்டு காட்டாறுகள், செங்குத்தான பாறைகள் நிறைந்த மலை மற்றும் வனப்பகுதிகளை கடந்து ஏழு கிலோ மீட்டர் நடந்து சென்று மூங்கில்பள்ளம் கிராமத்தை அடைந்து அங்கு வசிக்கும் 28 குடும்பங்களைச் சேர்ந்த பழங்குடி மக்களின் குறைகளைக் கேட்டறிந்தார். பளியர் இன சான்றிதழ்களையும், அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார். மலையில் வசதிகள் போதவில்லை என்பதால் மலையடிவாரத்தில் இடம் ஒதுக்கித் தருவதாகவும் அங்கு சென்று வசிக்க ஏற்பாடு செய்வதாகவும் ஆட்சியர் டி.ஜி.வினய் தெரிவித்தார்.
இதற்கு, நாங்கள் மற்றவர்களுடன் சேர்ந்து வசிக்கமாட்டோம் என பழங்குடி மக்கள் கூறியுள்ளனர். பின்னர் யோசித்து பதிலளிப்பதாக ஆட்சியரிடம் பளியர் இன மக்கள் தெரிவித்துள்ளனர். உடன் வந்த அலுவலர்களிடம், வீடு தவறாமல் ஆதார் அட்டை, குடும்ப அட்டை, மருத்துவக் காப்பீடு, பிறப்பு சான்று, சாதிச்சான்று என அனைத்தையும் வீடு தவறாமல் ஆய்வு செய்து வழங்க உடன் வந்த அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் இவர்கள் பெறவேண்டும் என்றார்.
கடைக்கோடி பழங்குடி கிராமத்திற்கு சென்ற முதல் ஆட்சியர்
திண்டுக்கல் மாவட்டம் துவங்கி 34 ஆண்டுகள் ஆன நிலையில் இதுவரை எந்த ஆட்சியரும் மூங்கில்பள்ளம் கிராமத்திற்குச் சென்றதில்லை. தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் மலை கிராமங்களிலேயே மக்கள் தொடர்புமுகாமை நடத்திவரும் திண்டுக்கல் ஆட்சியர் டி.ஜி.வினய், தமிழக, கேரள எல்லையில் அமைந்துள்ள மூங்கில்பள்ளம் கிராமத்திற்கு நேரில் சென்று பழங்குடி மக்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளார்.
இதுவரை இருந்த ஆட்சியர்கள் மலையடிவாரத்தில் உள்ள மஞ்சம்பட்டிவரை சென்று மூங்கில்பள்ளம், உலுவக்காடு மலைகிராமங்களில் வசிக்கும் பழங்குடி மக்களை மஞ்சம்பட்டிக்கு வரவழைத்து அங்கு முகாம் நடத்துவதை வழக்கமா கொண்டிருந்தனர். தற்போதும் அலுவலர்கள் மஞ்சம்பட்டியில் முகாம் நடத்த ஏற்பாடு செய்தனர்.
ஆனால் பழங்குடி மக்கள் வாழும் பகுதி அவர்களுக்குள்ள வசதிகளை நேரில்சென்று பார்க்கவேண்டும் என கூறி திண்டுக்கல் ஆட்சியர் டி.ஜி.வினய் மூங்கில்பள்ளம் கிராமத்திலேயே முகாம் நடத்த உத்தரவிட்டார்.