தமிழகம்

கோவை வந்த விமான பயணியிடம் 1.6 கிலோ தங்கம் பறிமுதல்

செய்திப்பிரிவு

இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து லங்கன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று கோவைக்கு நேற்று முன்தினம் வந்தது. அதில், ஒரு பயணி தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கோவை வந்திறங்கிய பயணிகளை அதிகாரிகள் நோட்டமிட்டனர். அப்போது பயணி ஒருவர், விமான நிலையத்தில் இருந்த 2 பேரை மறைவாக அழைத்துச் சென்று, தனது கைப்பையில் கொண்டு வந்த பார்சலை அவர்களிடம் கொடுத்தார்.

இதை கண்காணித்துக் கொண்டிருந்த அதிகாரிகள் 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கையில் வைத்திருந்த பார்சலை பிரித்துப் பார்த்தனர். அந்த பார்சலில் ரூ.55 லட்சம் மதிப்புள்ள 1.6 கிலோ எடையுள்ள 16 தங்கக் கட்டிகள் இருந்தது கண்டறியப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், விமானத்தில் வந்த பயணி திருச்சியைச் சேர்ந்த அபுதாஹீர் என்பதும், தங்கக் கட்டிகளைப் பெற்றவர்கள் விமான நிலைய ஊழியர்கள் மனோஜ், சதீஷ் என்பதும் தெரியவந்தது. பின்னர் தங்கத்துடன் வந்த அபுதாஹீரை அழைத்துச் செல்ல, விமான நிலையத்துக்கு வெளியே ராஜா என்பவர் காத்திருப்பதை அறிந்து அவரையும் கைது செய்தனர். இந்த கடத்தலில் தொடர்புடைய மிஸ்ரா என்பவரை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT