தமிழகம்

எச்ஐவி இல்லா சான்றிதழ் தந்தால்தான் திருமணம்: தமிழகத்துக்கு வழிகாட்டும் தேனி மாவட்ட கிராமம்

கி.மகாராஜன்

எச்ஐவி நெகட்டிவ் எனச் சான்றிதழ் தந்தால் மட்டும் திருமணம் செய்யும் வழக்கத்தை கட்டாயமாக்கி, தமிழகத்துக்கே வழிகாட்டுகிறது தேனி மாவட்டத்தில் உள்ள கருங்கட்டான்குளம் கிராமம். இக் கிராமத்தின் சேவையை உயர் நீதிமன்றம் பாராட்டியது.

ஆண்மைக்குறைவு, மலட்டுத் தன்மையால் திருமணங்கள் தோல் வியில் முடிவதைத் தடுக்க, திருமணத்துக்கு முன் ஆணுக் கும் பெண்ணுக்கும் மருத்துவப் பரிசோதனை நடத்தும் திட்டத்தை உயர் நீதிமன்ற மதுரை கிளை முன்வைத்தது. இப்பிரச்சினைக் குத் தீர்வுகாணும் நோக்கத்தில் வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பொதுமக்களிடம் கருத்து கேட்பதற்கான சிறப்பு விசாரணை, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விடுமுறை நாளான சனிக்கிழமை நடைபெற்றது.

நீதிபதி பாராட்டு

இதில் தேனி மாவட்டம், சின்ன மனூரைச் சேர்ந்த வழக்கறிஞர் எஸ்.அருண், உத்தமபாளையம் தாலுகா சின்னமனூர் கருங்கட்டான் குளத்தில் மறவர் சமுதாயத்தில் திருமணம் செய்யப் போகும் ஆணிடமும் பெண்ணி டமும் தங்களுக்கு எச்ஐவி இல்லை என சான்றிதழ் கேட்கும் வழக்கம் பல ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதாகக் கூறினார். இதற்காக கருங்கட்டான்குளம் கிராமத்தில் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்து வருபவர்களுக்கு நீதிபதி பாராட்டு தெரிவித்தார்.

சான்றிதழ் வழங்க வேண்டும்

உயர் நீதிமன்றத்தின் பாராட்டு களைப் பெற்ற கருங்கட்டான் குளத்தில் திருமணத்துக்கு முந்தைய மருத்துவ பரிசோதனை செய்யும் வழக்கம் 2007-ம் ஆண்டி லிருந்து நடைமுறையில் உள்ளது. கருங்கட்டான்குளத்தில் மறவர் சமுதாயத்தைச் சேர்ந்த சுமார் 5 ஆயிரம் பேர் கொண்ட 1542 குடும்பங்கள் உள்ளன. இவர்கள் மறவர் சமூக நலச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இங்குள்ள மறவர் மக்கள் மன்றத்தில் திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண் தங்களுக்கு எச்ஐவி இல்லை என திருமணத்துக்கு முன் சங்க நிர்வாகிகளிடம் சான்றிதழ் வழங்க வேண்டும். திருமணத்துக்கு பதிவு செய்யும்போது எச்ஐவி பரிசோத னைக்காக சங்கம் சார்பில் மணமகன், மணமகள் பெயர்கள் எழுதப்பட்ட விண்ணப்பம் தரப் படும். அந்த விண்ணப்பத்தை அரசு மருத்துவமனையில் வழங்கினால், இருவருக்கும் எச்ஐவி பரி சோதனை செய்யப்பட்டு சான் றிதழ் வழங்கப்படும். அதை சங்க நிர்வாகிகளிடம் அளிக்க வேண்டும். சான்றிதழில் எச்ஐவி இல்லை என குறிப்பிட்டிருந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும்.

சான்றிதழ் தந்தால்தான் திருமணம்

இது குறித்து மறவர் சமூக நலச் சங்கத் தலைவர் ஆர்.தவமணி ராமச்சந்திரன் ‘தி இந்து’ செய்தியாளரிடம் தொலைபேசி யில் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

மறவர் சமுதாயத்தில் லாரி ஓட்டுநர்கள், கிளீனர்கள் அதிகம் பேர் உள்ளனர். 2007-ல் இளைஞர்கள் சிலர் எச்ஐவி நோயால் இளவயதிலேயே இறந்தனர்.அந்த இளைஞர்களை திருமணம் செய்து கொண்ட இளம் பெண்கள், அவர்களுக்கு பிறந்த குழந்தைகளும் எச்ஐவியால் பாதிக்கப்பட்டனர்.

எச்ஐவியால் இளம் வயதில் இளைஞர்கள் இறந்ததும், பெண்கள் கண்ணீர் சிந்தியதையும் நினைத்து வருந்திய சமுதாய பெரியவர்கள் இந்தக் கொடுமையைத் தடுக்க ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தனர்.

இதையடுத்தே, நம் சமுதாயத்தில் திருமணம் செய்யும் ஆண், பெண்ணிடம், தங்களுக்கு எச்ஐவி இல்லை என திருமணத்துக்கு முன் சான்றிதழ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது. அவ்வாறு சான்றிதழ் தந்தால் மட்டுமே திருமணம் செய்து வைப் பதும் திருமணத்தில் சமுதாய பெரியவர்கள் கலந்துகொள்வதும் என முடிவெடுத்தோம்.

ஆண்களிடம் மட்டும் சான்றிதழ் பெற்றால் போதும் என முதலில் முடிவு செய்யப்பட்டது. பின்னர் வாழ்க்கைப் பிரச்சினையில் பாகு பாடு பார்க்கக்கூடாது என்பதால் ஆண், பெண் இருவரிடமும் சான்றிதழ் பெற முடிவு செய்யப் பட்டது.

மணமக்கள் எச்ஐவி பரிசோதனைக்காக மருத்துவத் துறை அதிகாரியிடம் பேசி, இந்த சோதனைக்காக மணமக்கள் பெயர்களைக் குறிப்பிட்டு சங்கத் தலைவர் கையெழுத்திட்டு விண் ணப்பம் அளித்தால், தாமதம் செய்யாமல் இலவசமாக சோத னையை முடித்து தர சம்மதம் பெறப்பட்டுள்ளது என்றார்.

மாநிலம் முழுவதும் வேண்டும்

ஆண்மைக்குறைவு விவகாரம் விஸ்வரூபம் பெற காரணமான வழக்கின் வழக்கறிஞர் பி.முத்துவிஜயபாண்டியன் கூறும்போது, ‘எச்ஐவி’யை தடுப்பதில் தமிழகத்துக்கு முன்மாதிரியாக கருங்கட்டான்குளம் உள்ளது. இந்த வழக்கத்தால் எச்ஐவியால் இளம்தலைமுறையினர் பாதிக்கப்படுவது தடுக்கப்பட்டுள்ளது. இதனை மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்த வேண்டும். திருமணத்துக்கு முந்தைய மருத்துவப் பரிசோதனையை கட்டாயமாக்க வேண்டும். இப்பிரச்சினையில் அரசு தீவிரம் காட்ட வேண்டும் என்றார்.

SCROLL FOR NEXT