தமிழகம்

நாமக்கல்லில் ஆஞ்சநேயருக்கு பூஜை செய்தபோது தவறி விழுந்த அர்ச்சகர்: சிகிச்சை பலனின்றி மரணம்

செய்திப்பிரிவு

நாமக்கல் அஞ்சநேயர் கோயில் பூஜையின்போது நடைமேடையிலிருந்து தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த அர்ச்சகர் சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இரவு உயிரிழந்தார்.

நாமக்கல்லில் பிரசித்தி பெற்றது ஆஞ்சநேயர் கோயில். மிக தொன்மை வாய்ந்த கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் சிலை 18 அடி உயரமுள்ளது. நேற்று விசேஷ தினத்தை ஒட்டி ஆஞ்சநேயர் விக்கிரகத்துக்கு 11 அடியில் நடைமேடை அமைத்து பூஜை செய்யப்பட்டது.

இந்தக் கோயிலில் அர்ச்சகராக இருப்பவர் நாகராஜன் (55). இவரது சகோதரர் வெங்கடேசன் (53). வெங்கடேசன் வழக்கமான கோயில் அர்ச்சகர் அல்ல. நாகராஜனுக்கு உதவியாக கோயில் பணியில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று பூஜையின்போது பக்தர்கள் கொடுக்கும் மாலையை ஆஞ்சநேயர் சிலைக்கு அணிவிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென அவர் நிலை தடுமாறி 11 அடி உயர மேடையின் மீதிருந்து கீழே விழுந்தார். தலை குப்புற கீழே விழுந்ததில் வெங்கடேஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தலையில் ஏற்பட்ட காயத்தால் முளையில் ரத்தக்கசிவு ஏற்பட்ட நிலையில் அர்ச்சகர் வெங்கடேஷ் உயிருக்குப் போராடி வந்தார். அங்கு அபாயக் கட்டத்தைத் தாண்டாத நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவருக்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக் கசிவை நிறுத்த சிகிச்சை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் தீவிர சிகிச்சையில் இருந்த வெங்கடேஷ் நேற்றிரவு நினைவு திரும்பாமலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அர்ச்சகர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஞ்சநேயர் கோயிலின் வரலாற்றில் இப்படியொரு துர்சம்பவம் நடப்பது இதுவே முதல் முறை என்று கோயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT