நான் அமைச்சராக இருந்தபோது தமிழகத்தில் செல்லாத கிராமங்களே இல்லை என சேலத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் பாகல்பட்டியில் திமுக சார்பில் நேற்று நடந்த ஊராட்சி சபை கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பழங்காலத்தில் குடவோலை முறையில் ஊராட்சித் தலைவர் தேர்ந்தெடுத்த காலம் மாறி, வாக்குச் சீட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் என தேர்தல் நவீனமாகியுள்ளது. ஆனால், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலே நடத்தாமல் ஆட்சி நடந்து வருகிறது.
நாங்கள் கிராமம், கிராமமாகச் சென்று ஊராட்சி சபை கூட்டம் நடத்தி மக்களிடம் மனுக்களை பெற்று, உரிய அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து வருகிறோம். இந்த ஆட்சியில் உங்கள் மனுவுக்கு தீர்வு கிடைக்கவில்லை என்றால் எங்கள் ஆட்சியில் தீர்வு காண்பேன் என உறுதி கூறுகிறேன்.
“ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது எத்தனை கிராமங்களுக்கு சென்றார்” என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்புகிறார்.
நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, தமிழகத்தில் செல்லாத கிராமங்களே இல்லை. உங்கள் ஆட்சியில் எத்தனை அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் கிராமங்களுக்கு சென்றனர் என்ற பட்டியலை உங்களால் தெரிவிக்க முடியுமா?
திமுக ஆட்சியில் முறையாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தி உள்ளாட்சி அமைப்புக்கு தேவையான திட்டங்களை நமக்கு நாமே திட்டம் மூலம் அமல்படுத்தி, சிமென்ட் சாலைகள் அமைத்து, மயானங்களை சுத்தப்படுத்தி, குடிநீர், பொது சுகாதாரத்தை பூர்த்தி செய்து தந்துள்ளோம். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
முன்னதாக பாகல்பட்டியில் நடந்த வாக்குச் சாவடி முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் அவர் பேசினார்.