பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பெரும்பாலான ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளதால், ஆசிரியர்கள் இல்லாமலேயே பள்ளிகள் இயங்குகின்றன. சில பள்ளிகளில் மாணவர்களே பாடங்களை நடத்துகின்றனர்.
இந்த நிலையில், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்ஜுனன், கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் நேற்று குழந்தைகளுக்குப் பாடம் நடத்தினார்.
இதுகுறித்து அம்மன் அர்ஜுனன் எம்எல்ஏ கூறும்போது, "வழக்கமாக நான் தினமும் தொகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மக்கள் குறைகளைக் கேட்டு, உரிய தீர்வு பெற்றுத்தருவேன். இதன்படி, கோவை கோட்டைமேடு பகுதியில் சென்றபோது, அங்குள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் பணியாற்றும் 3 ஆசிரியர்களுமே பணியில் இல்லை. இதுகுறித்து தலைமை ஆசிரியையிடம் கேட்டபோது, வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளதாக கூறினார்.
இதையடுத்து, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு நான் பாடம் நடத்தினேன். ஏபிசிடி, 1, 2, 3...., அ, ஆ, இ, ஈ... ஆகியவற்றை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுத்தேன். தற்போது அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருவதால், ஏராளமான குழந்தைகள் பள்ளிக்கு வருகின்றனர்.
இப்பள்ளியில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள், அங்கன்வாடி மையத்தில் சேர்த்து மொத்தம் 60 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் பாடம் கற்றனர். சில குழந்தைகளிடம் தமிழ், ஆங்கில எழுத்துகளைக் காட்டியபோது, மிகச் சரியாக அந்த எழுத்தைக் கூறினார்கள். அரசுப் பள்ளிகளில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளது நல்ல பலனைக் கொடுத்துள்ளது என்றார்.