தமிழகம்

நாட்டைக் கொள்ளையடித்தவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தியே தீருவோம்: மதுரை கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு

செய்திப்பிரிவு

நாட்டைக் கொள்ளையடித்தவர்களை சட்டத்தின் முன்பு நிறுத்தியே தீருவோம் என மதுரையில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டினார். மதுரை, தஞ்சாவூர், திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லூரிகளில சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களையும் அவர் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவை தொடர்ந்து, அதே மைதானத்தில் பாஜக கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

தமிழ் சங்கம் வளர்த்த மதுரைக்கு வரலாற்றில் தனி இடம் உண்டு. பாரம்பரிய மிக்க இந்த நகரத்தில் உங்கள் முன்பு உரையாற்றுவதில் பெருமை கொள்கிறேன். எனது தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சுத்தமான இந்தியா உட்பட பல திட்டங்களால் மக்கள் பயன் பெற்று வருகின்றனர்.

இந்த அரசு மீது ஊழல் புகார் இல்லை. நாட்டை கொள்ளையடித்தவர்கள் யாராக இருந்தாலும் விடமாட்டோம். எங்கிருந்தாலும் அவர்களை கொண்டுவந்து நீதியின் முன்னர் நிறுத்தியே தீருவோம். ஊழலுக்கு எதிராக நான் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பதால் தான், என்னை பதவியில் இருந்து வெளியேற்ற எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து  கூட்டணியை அமைத்துள்ளன.

வருமானத்தில் நலிந்த பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான சட்டம் பற்றி தமிழ்நாட்டில் சிலர் தங்களது ஆதாயத்துக்காக சந்தேகத்தை கிளப்பி வருவது துரதிர்ஷ்டவசமானது. இந்த 10 சதவீத இட ஒதுக்கீட்டால் தற்போது நடைமுறையில் இருக்கும் தலித்துகள், பழங்குடியினர் உள்ளிட்டோருக்கான இட ஒதுக்கீட்டு முறையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

தேவேந்திர குல வேளாளர்கள் சில கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். இதுகுறித்து பரிசீலிக்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தையும், தமிழக அரசையும் கேட்டுக் கொண்டுள்ளேன். அவர்கள் பரிந்துரை அளித்த பிறகு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

SCROLL FOR NEXT