தமிழகம்

2 இடங்களில் பைக் நிலைத்தடுமாறி விபத்து: புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டு திரும்பிய 2 இளைஞர்கள் பலி

செய்திப்பிரிவு

சென்னையில் 2 வெவ்வேறு இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவிட்டு வீடு திரும்பிய 2 இளைஞர்கள் மோட்டார் பைக் நிலைத்தடுமாறி விபத்தில் சிக்கி பலியானார்கள்

சென்னை தண்டையார்பேட்டை சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் அபிலேஷ் (29). நேற்றிரவு புத்தாண்டை நண்பர்களுடன் மகிழ்ச்சியாக கொண்டாடினார். பின்னர் கொண்டாட்டத்தை முடித்து விட்டு நள்ளிரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். மிண்ட் மேம்பாலத்தில் அதிவேகமாக சென்று கொண்டிருந்தபோது நிலைத்தடுமாறி சாலை தடுப்பில் மோதினார்.

இதில் படுகாயமடைந்த அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலன் அளிக்காமல்  அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிலைத்தடுமாறி விழுந்து பலியான கீழ்ப்பாக்கம் இளைஞர்

சென்னை கீழ்ப்பாக்கம் பால்பர் சாலையைச் வசிப்பவர் நமேஷ் பட்டேல் (50). இவரது மகன் பிரிஜேஷ் பட்டேல் (23). இவர் புத்தாண்டை ஒட்டி நண்பர்களுடன் கொண்டாட வெளியேச்சென்றார். புத்தாண்டு கொண்டாட்டம் முடிந்து பைக்கில் வீட்டிற்கு திரும்பிச் சென்றுக் கொண்டிருந்தார். கொரட்டூர் கெனால் பேங்க் ரோட்டில் சென்று கொண்டிருந்த போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில் அவர் படுகாயம் அடைந்தார். படுகாயத்துடன் உயிருக்கு போராடியவரை அருகிலுள்ளோர் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். விபத்து குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT