திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நேற்று காலை நடைபெற்ற கட்சிப் பிரமுகர்ின் இல்ல விழாவில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:
முன்பு ஒருமுறை குஜராத் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் எனது உரையை குஜராத்தியில் மொழிபெயர்த்தவர் நரேந்திர மோடி. அவர் பிரதமராக பதவியேற்கும் விழாவுக்கு ராஜபக்சவை அழைத்தது குறித்து தெரிந்தவுடன், அதை கண்டித்தேன்.
முல்லை பெரியாறு அணை, மேகேதாட்டு அணை, நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள மோடிக்கு அறவழியில் கருப்புக்கொடி காட்டாமல் இருந்தால் எதிர்காலத்தில் தமிழனுக்கு மானம் இல்லை என்ற அவப்பெயர் ஏற்படும்.
என்னை தமிழின துரோகி என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மோடிதான் தமிழின துரோகி என்று தெரிவித்துக்கொள்கிறேன். திமுக தலைவர் ஸ்டாலின் அரசியல் சதுரங்கத்தில் கவனமாகவும், சாதுர்யமாகவும் காய்நகர்த்தி வருகிறார்.
வரும் மக்களவைத் தேர்தலுக்குப் பின் மத்தியில் ஆட்சியை நிர்ணயிக்கும் சக்தியாக திமுக தலைவர் ஸ்டாலின் இருப்பார். இவ்வாறு வைகோ பேசினார்.