மெரினா கடற்கரையைப் பராமரிக்க ஒதுக்கும் நிதி மற்றும் அங்கு மேற்கொள்ளப்பட உள்ள உட்கட்டமைப்பு வசதி விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆழ்கடலில் மீன் பிடிக்க அனுமதி பெற மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய விதிகளை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மெரினா கடற்கரையை ஆக்கிரமித்து மீன் கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றுக்கு மாற்று இடம் வழங்குவது குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
அதே போல மெரினாவைச் சுத்தப்படுத்த திட்டம் வகுக்கவும் அறிவுறுத்தியிருந்தது, இந்த வழக்கு நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு நடந்து வருகிறது. கடைசியாக கடந்த டிச.17 அன்று விசாரணைக்கு வந்த போது, மாநகராட்சி ஆணையர் ஆஜரானார்..
மெரினா கடற்கரையைத் தூய்மைப்படுத்த பல்வேறு இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாகவும், கடற்கரையைச் சுத்தப்படுத்த காலை 6 மணி பிற்பகல் 2 மணி இரவு 10 மணி என மூன்று ஷிப்டுகளில் 250 பணியாளர்கள் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மாநகராட்சி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும், மெரினாவில் கடை அமைக்க 1,544 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன் கடைகளைப் பொறுத்தவரை மீன் சந்தை அமைக்க கடலோர ஒழுங்குமுறை மண்டல ஆணையத்தின் ஒப்புதல் கோரப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது.
இதை அடுத்து மெரினாவைச் சுத்தப்படுத்தும் பணியை ஆய்வு செய்யும் வகையில் ஒரு மாதத்திற்கு தினமும் அங்கு காவல்துறை ஆணையருடன், நடைப்பயற்சி மேற்கொள்ளும் படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் ஆலோசனை தெரிவித்தனர்.
மெரினாவைப் பராமரிக்க ஒதுக்கப்படும் நிதி, மேற்கொள்ளபடவுள்ள உட்கட்டமைப்பு வசதிகள் குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 10-ம் தேதிக்கு ஒத்திவைத்திருந்தனர்.
இந்நிலையில் வழக்கு இன்று நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது மெரினாவில் அமைக்கப்படும் தூய்மைப்பணிகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் நேரில் ஆஜராகி அறிக்கை தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் மெரினா கடற்கரையில் கடலோர ஒழுங்குமுறை சட்டத்தின்படி 40 கோடி ரூபாய் செலவில் மின் விளக்குகள், பாதைகள், சைக்கிள் பாதைகள், உணவகங்கள், சைக்கிள் நிறுத்துமிடங்களுக்காக திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அப்போது கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மெரினாவில் உணவகங்கள் அமைக்கப்படுவதால் கடல்வாழ் உயிரினங்களான ஆமைகள், மீன்கள் பாதிக்கப்படாமல் இருக்க அறிவியல்பூர்வமாக திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
மீனவர்களின் கடைகளை அகற்றி ஒழுங்குப்படுத்த ஏன் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசுத்தரப்பு வழக்கறிஞர் ராஜகோபால் மீனவர் சங்கத்தினருடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் இன்னும் 3 அல்லது 4 மாதத்துக்குள் மீனவர்களுக்கான மீன் விற்பனை கடைகள் அமைக்க மாற்று இடங்கள் கட்டாயம் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.
அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள் மெரினா கடற்கரையில் 2000-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதாக அறிகிறோம் அதை அகற்றிவிட்டு புதிய உரிமத்துடன் குறைவான கடைகளை அமைக்கலாம் என்று அறிவுறுத்திய நீதிபதிகள் மெரினா கடற்கரையில் உள்ள கடைகளை அப்புறப்படுத்திவிட்டு அவர்களுக்கு உரிமத்துடன் புதிய கடைகள் அமைக்க வேண்டும்.
கடைஉரிமையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும், அதில் அவர்களது முழு விபரம் இருக்கும் வகையில் மாநகராட்சி பார்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மெரினா கடற்கரையை ஒழுங்குப்படுத்தும் வரைவு அறிக்கையை பிப்.1 அன்று தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை பிப்.1-க்கு ஒத்திவைத்தனர்.