தமிழகம்

ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் உள்ளிட்ட 4 சொத்துகள் வரி பாக்கிக்காக முடக்கப்பட்டது: உயர் நீதிமன்றத்தில் தகவல்

செய்திப்பிரிவு

ஜெயலலிதா வருமான வரி பாக்கி மற்றும் சொத்து வரி பாக்கி வைத்துள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி பாக்கிக்காக அவரது போயஸ் இல்லம் உள்ளிட்ட 4 சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது

சென்னை போயஸ் தோட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக் கோரி டிராபிக் ராமசாமி, தங்கவேலு ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அமர்வில் ஜனவரி 3-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை ஒரு தலைவரின் நினைவைப் போற்றும் விதமாக, தனியார் மற்றும் அரசு சொத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு வழிவகை செய்யும் சட்டம் குறித்து தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

அதேபோன்று, ஜெயலலிதா செலுத்த வேண்டிய வரி பாக்கித் தொகை பற்றியும், வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதன் மீதான நிலைப்பாட்டையும் வருமான வரித்துறை தெரிவிக்க உத்தரவிட்டிருந்தனர்.

இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் நீதிபதி வினித் கோத்தாரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது வருமான வரித்துறை துணை ஆணையர் ஷோபாவின் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 1990-91 முதல் 2011-12 வரையிலான நிதியாண்டுகளில் ஜெயலலிதா செலுத்த வேண்டிய சொத்து வரி 10 கோடியே 12 லட்சத்து 01 ஆயிரத்து 407 ரூபாய் நிலுவையில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோல, 2005-06 முதல் 2011-12 வரையிலான நிதியாண்டுகளில் செலுத்த வேண்டிய வருமான வரி பாக்கி 6 கோடியே 62 லட்சத்து 97 ஆயிரத்து 720 ரூபாய் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

வரி பாக்கிக்காக ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம், ஹைதராபாத், ஸ்ரீநகர் காலனியில் உள்ள வீடு, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள சொத்து, சென்னை மந்தவெளி புனித மேரி சாலையில் உள்ள சொத்து என நான்கு சொத்துகள் 2007, 2013 ஆகிய ஆண்டுகளில் முடக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

வருமான வரித்துறை தரப்பில் வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜராகி, வரி பாக்கித் தொகை செலுத்தும் பட்சத்தில் நினைவு இல்லமாக மாற்ற ஆட்சேபம் இல்லை என தெரிவித்தார். நீதிபதிகள் குறுக்கிட்டு அறிக்கையில் உள்ள தொகை தொடர்பான விவரங்கள் தெளிவாக இல்லை என்பதால் விரிவான தெளிவான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, நினைவில்லமாக மாற்றுவது குறித்து மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர் அதற்கான தொகை வழங்கப்படும்போது வருமான வரித்துறையின் பாக்கி செலுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

சுற்றுச்சூழல், சமூக, பொருளாதார மதிப்பீட்டு ஆய்வுகளை மேற்கொள்ளாமல் எப்படி மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தப்படுகிறது என விளக்கமளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டதுடன், தனி நபரின் பாக்கியை எப்படி அரசு செலுத்த முடியும் என கேள்வி எழுப்பினர்.

அதற்கு விளக்கமளித்த அரசு தலைமை வழக்கறிஞர், ஜெயலலிதா சொத்து நிர்வாகம் குறித்த அதிமுக நிர்வாகியான எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த புகழேந்தி என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், ஜெயலலிதாவின் ரத்த முறை வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் வழக்கில் இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சொத்தை கையகப்படுத்தப்படும் தொகையிலேயோ அல்லது நிர்வாக உரிமை கோருபவர்கள் மூலமாகவோ வரி பாக்கி செலுத்தப்படும் எனத் தெரிவித்தார்.

பின்னர் புகழேந்தி வழக்கு தொடர்பான விவரங்களையும் தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை இரண்டு வார காலத்திற்கு நீதிபதிகள் வினீத் கோத்தாரி, அனிதா சுமந்த் அமர்வு ஒத்திவைத்தது.

SCROLL FOR NEXT