தமிழகம்

சென்னையில் மற்றொரு சோகம்; போலீஸாரின் அவதூறுப் பேச்சால் கால் டாக்ஸி ஓட்டுநர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

செய்திப்பிரிவு

சென்னையில் மணிகண்டன் தீக்குளிப்பு சம்பவத்தை அடுத்து இரண்டாவது சம்பவமாக போலீஸாரின் அவதூறுப் பேச்சால் மனமுடைந்த கால் டாக்ஸி ஓட்டுநர் ரயில் தண்டவாளத்தில் தலை வைத்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸார் அவதூறாகப் பேசுவதால் மன உளைச்சலுக்கு ஆளாகும் சாதாரண நபர்கள் தற்கொலை முடிவைத் தேடுவது சோகமான நிகழ்வு. கடந்த ஆண்டு மணிகண்டன் என்கிற கால் டாக்ஸி ஓட்டுநரைப் போக்குவரத்து போலீஸார் அவதூறாகப் பேசி திட்டியதால் மனமுடைந்த அவர் காரிலிருந்த பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார்.

அதேபோன்றதொரு சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. பெண் பயணி முன் தகாத வார்த்தைகளால் போலீஸார் திட்டியதால் மனமுடைந்த கால் டாக்ஸி ஓட்டுநர் வீடியோவில் இதுகுறித்துப் பதிவு செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

திருவண்ணாமலை ஆரணியைச் சேர்ந்தவர் ராஜேஷ். இவர் சென்னையில் பிரபல நிறுவனத்தில் கால் டாக்ஸி ஓட்டி வந்தார். கடந்த 25-ம் தேதி காலை 8 மணி அளவில் இவர் ஒரு பெண் பயணியை ஏற்றிக்கொண்டு  பாடியிலிருந்து கோயம்பேடு நோக்கி செல்லும் வழியில் அண்ணா நகர் சிக்னல் அருகே இன்னொரு பயணியையும் ஏற்றிச் செல்லக் காத்திருந்தார்.

அப்போது அங்கு வந்த போலீஸார் அவரது கார் மீது தட்டி காரை அங்கிருந்து எடுக்கும்படி கூறியுள்ளனர். அதைக் கேட்டுக்கொண்டு அவர் சற்றுத்தள்ளி ஓரமாக ஒதுக்குப்புறமாக நிறுத்தினார். அப்போது போலீஸார் அவரை மீண்டும் திட்டியதாக தெரிகிறது. வண்டியை ஓரமாக நிறுத்தியிருக்கிறேன் என்று கூறியபோது ராஜேஷை மிகவும் அவதூறாகத் திட்டியதாகக் கூறப்படுகிறது.

பெண் பயணி எதிரில் அவதூறாகத் தன்னைத் திட்டியதால் மனமுடைந்த ராஜேஷ் மறைமலை நகர் ரயில் நிலைய தண்டவாளத்தில் தலைவைத்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து போலீஸார் தற்கொலை வழக்காகப் பதிவு செய்து அவரது உடலை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

ராஜேஷ் தற்கொலை செய்துகொள்ள ஒரு காரணமும் இல்லை என சந்தேகித்த உறவினர்கள் செல்போனை சோதித்தபோது அதில் எந்தத் தகவலும் இல்லை. ஆனாலும் சந்தேகம் அடைந்த உறவினர்கள் ரெக்கவரி ஆப் மூலம் அவரது செல்போனில் அழிக்கப்பட்ட தகவல்களை எடுத்துள்ளனர். அதில் ராஜேஷ் தனது தற்கொலை முடிவுக்கான காரணத்தை தெளிவாக காணொலியில் பேசியுள்ளார்.

அந்தக் காணொலி தற்போது வைரலாகியுள்ளது. அதில் அன்று நடந்த சம்பவத்தை மனக்குமுறலுடன் கூறும் அவர் அன்று தன்னை போலீஸார் பெண் பயணிக்கு எதிராக மிகவும் கீழ்த்தரமாக தன்னுடைய தாயைப் பழித்தும் தன்னையும் கீழ்த்தரமாக போலீஸார் பேசியதாக தெரிவித்தார்.

தினமும் எத்தனை மணி நேரம் நாங்கள் பணியாற்றுகிறோம் தெரியுமா? திருவொற்றியூரில் சமீபத்தில் ஓரமாக காரை நிறுத்திவிட்டு தூங்கிக் கொண்டிருந்தேன், தூங்கும்போது காரில் லாக் போட்டு 500 ரூபாய் பிடுங்கிக்கொண்டனர். அதற்கு ரசீது கேட்டபோது தரக்குறைவாக திட்டி தாக்க வந்தனர் என கூறும் அவர் மண்கண்டன் என்கிற ஓட்டுநர் கடந்த ஆண்டு இதே காரணத்தால் உயிரிழந்தார். என் சாவுக்கும் போலீஸார்தான் காரணம் என்று கூறினார்.

முதல்வரும், கமிஷனரும் நடவடிக்கை எடுத்தார்கள். என்ன மாற்றம் நிகழ்ந்தது? அவர்களை ஆயுதப்படைக்கு மாற்றுகிறீர்கள். பிறகு மீண்டும் அதே பணிக்கு வந்து அதே நிலைதான் தொடர்கிறது என்று ராஜேஷ் பேசினார். எங்கே போனாலும் போலீஸார் தொல்லை பெரிய தொல்லையாக இருக்கிறது. போலீஸ் இப்படி செய்யலாமா? என்று ராஜேஷ் கேள்வி எழுப்பினார்.

இதுவரை ஓட்டுநர்கள் தினமும் நொந்து நூலாகி பணியாற்றுகின்றனர். இதில் போலீஸ் தொல்லை வேறு. என்னோடு இந்த நிலை ஒழியட்டும் என்று ராஜேஷ் பேசிய காணொலி தற்போது வைரலாகி வருகிறது. போலீஸாரின் அவதூறுப் பேச்சு காரணமாக மணிகண்டனைத் தொடர்ந்து தற்போது ராஜேஷ் என்கிற ஓட்டுநரும் தற்கொலை செய்துள்ளது கால் டாக்ஸி ஓட்டுநர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT