மதுரை வக்ஃபோர்டு கல்லூரியில் உதவிப் பேராசிரியர்கள், ஆசிரியர் கள் அல்லாத பணியாளர்கள் நியமனத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பான வழக்கை சிபிஐ விசாரிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சர்தார் பாஷா, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: வக்ஃபோர்டு கல்லூரியில் 2017-ம் ஆண்டில் 30 உதவிப் பேராசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியாளர் கள் நியமனம் செய்யப்பட்டனர்.
இவர்களில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களிடம் ரூ.30 லட்சமும், பிற மதத்தை சேர்ந்தவர்களிடம் ரூ.35 லட்சமும் லஞ்சம் பெறப் பட்டுள்ளது.
இப்பணத்தை கல்லூரி நிர் வாகக் குழு உறுப்பினர்கள், வக்ஃபோர்டு தலைவரும், அதிமுக எம்பியுமான அன்வர்ராஜா, வக்ஃபோர்டு உறுப்பினரான அமைச்சர் நிலோபர் கபில் ஆகி யோர் பங்கிட்டுள்ளனர்.
உதவிப் பேராசிரியர்கள் 30 பேரில் பலர், பல்கலைக் கழக மானியக்குழு விதிப்படி உரிய கல்வித் தகுதியை பெற்றி ருக்கவில்லை. பணம் வாங்கிக் கொண்டு தகுதியில்லாதவர் களுக்கு பணி வழங்கி உள்ளனர். இந்த முறைகேடு தொடர்பாக, சிபிஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டி ருந்தது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர் சிபிஐ-க்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் அனுப்பியுள்ளார். அந்தப் புகாரை தலைமைச் செயலருக்கு சிபிஐ அனுப்பியுள்ளது.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆவணங்களை ஆய்வு செய்த போது முறைகேடு நடந்திருக்க முகாந்திரம் இருப்பது தெரிகிறது.
இதனால் வக்ஃபோர்டு கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமன முறைகேடு தொடர்பான புகாரை சிபிஐ 6 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தர விட்டார்.