தமிழகம்

ஜல்லிக்கட்டில் உயிரிழப்பவர்களுக்கு இழப்பீடு வழங்குவது அரசா? அமைப்பா?- தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

செய்திப்பிரிவு

ஜல்லிக்கட்டு போட்டியின் போது உயிரிழந்தாலோ நிரந்தம் ஊனம் அடைந்தாலோ அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது அரசா? அல்லது நடத்தும் கமிட்டியா? என தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் உரிமை மீட்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் சி.செல்வகுமார் தாக்கல் செய்துள்ள மனுவில்,  தமிழ் கலாச்சாரத்துக்கு சம்பந்தமில்லாத ஜல்லிக்கட்டு போட்டிக்காக அமைக்கப்படும் கமிட்டிகளில் அனைத்து சமூக பிரதிநிதிகளையும் இடம்பெறச் செய்யும்படி அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.

நாயக்க மன்னர்களின் காலத்தில்  உருவான ஜல்லிக்கட்டு தமிழ் மக்களின் விளையாட்டு என்பதற்கு கலித்தொகை தவிர வேறெதிலும்  ஆதாரம் இல்லை எனவும், அரசு மற்றும் சட்டத்தின் துணையுடன் சாதி ஆதிக்க விளையாட்டாக ஜல்லிக்கட்டு மாறியுள்ளதாகவும், ஜல்லிக்கட்டுக்காக அமைக்கப்பட்டுள்ள குழுக்களில் இதர சாதியினர் புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் மனுவில் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அமர்வு ஜல்லிக்கட்டு குழுவில் யாரெல்லாம் அங்கம் வகிக்க வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. அதில் நீதிமன்றம் கருத்து கூற முடியாது என்ற நீதிபதிகள் ஜல்லிக்கட்டு போட்டியின் போது போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் உயிரிழந்தாலோ, நிரந்தம் ஊனம் அடைந்தாலோ அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது யார்? என தமிழக அரசு வரும் 18-ம் தேதிக்குள் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT