தமிழகத்தில் முதல்முறையாக சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் வெளிமான் ஒன்றுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவின் இயக்குனர் வெளியிட்ட செய்தியில் கூறியுள்ளதாவது:
அழிந்துவரும் வெளிமான் இனத்தை சேர்ந்த பெண் மான் ஒன்று இடது பின்னங்கால் ஒடிந்த நிலையில் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தது. இதையடுத்து, அந்த மானுக்கு மயக்க மருந்து ஊசி போடப்பட்டு வன உயிரின அவசர சிகிச்சை ஊர்தியின் மூலம் பூங்காவின் வனவிலங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அந்த மானின் கால்களை எக்ஸ்ரே செய்து பார்த்த போது இடது பின்னங்கால், முழங்கால் எலும்பு முழுவதும் முறிந்து நொறுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
பூங்காவின் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் அந்த மானுக்கு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை செய்து கம்பி மற்றும் தகடு பொருத்த முடிவு செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையில் சென்னை வேப்பேரி கால்நடை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜஸ்டின் வில்லியம் தலைமையில் பேராசிரியர் தனஞ்ஜெய ராவ் மற்றும் உதவி பேராசிரியர் அருண் பிரசாத் ஆகியோர் கொண்ட குழுவினரும் பூங்காவின் கால்நடை மருத்துவர்களும் ஈடுபட்டனர். கடந்த 5-ம் தேதி இரவு எலும்பு முறிவு அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த அறுவை சிகிச்சையில் மானின் காலில் உடைந்த நிலையில் இருந்த எலும்புகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக எலும்பை கம்பி மூலம் நேராக்கி தகடு பொருத்தப்பட்டது. மேலும் எலும்பு விரைவில் வளர்வதற்கு ஏதுவாக மானின் ரத்தம் சேகரிக்கப்பட்டு சூழல் படிம விசை இயந்திரம் மூலம் இரத்த உறை அணுக்கள் செறிந்த இரத்த திரவம் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தில் செலுத்தப்பட்டது.
வெளிமான் தற்போது நலமுடன் உள்ளது. தமிழகத்தில் இதுபோன்று மானுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது இதுவே முதல்முறையாகும்.
இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.