தமிழகம்

மாதவரம் சாலையில் கால் டாக்ஸி டிரைவர் மீது கொடூரத் தாக்குதல்: நகை, பணம், செல்போனை பறித்த 2 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது

செய்திப்பிரிவு

புழல் மாதவரம் நெடுஞ்சாலையில் சாலையோரம் நின்றிருந்த கால் டாக்ஸி ஓட்டுநரைக் கத்தியால் கொடூரமாகத் தாக்கி அவரிடமிருந்த பணம், நகை, செல்போனைப் பறித்துச் சென்றனர். இதில் 2 சிறுவர்கள் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை கொடுங்கையூர் கடும்பாடி அம்மன் கோயில் தெருவில் வசிப்பவர் ஸ்ரீதர். இவர் தனியார் கம்பெனியில் கால் டாக்ஸியை ஒட்டி வருகிறார். கடந்த 22-ம் தேதி நள்ளிரவு புழல் அடுத்த ரெட்டேரி - மாதவரம் நெடுஞ்சாலையில் சாலை ஓரத்தில் காரை நிறுத்திவிட்டு ஒய்வெடுத்துக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த 5 பேர் ஸ்ரீதரிடம் பேச்சு கொடுத்தனர். கார் வாடகைக்கு வருமா எனக் கேட்டனர். நேரடியாக சவாரி போக முடியாது, கம்பெனி மூலமாகத்தான் புக் பண்ணமுடியும் என ஸ்ரீதர் தெரிவித்தார். அப்போது அவர்கள் திடீரென அவரிடமிருந்து செல்போனைப் பறிக்க முயன்றனர்.

இதையடுத்து அதிர்ச்சியடைந்த ஸ்ரீதர் அவர்களிடம் செல்போனைக் கொடுக்காமல் போராடினார். அதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சராமாரியாக குத்தினர். இதில் முகத்தில், கை, கால்களில் ஸ்ரீதருக்கு வெட்டு விழுந்தது.

அப்போது ஸ்ரீதர் அவர்களுடன் போராடினார், கூச்சலிட்டுள்ளார். அவ்வழியாக சாலையில் சென்றவர்கள் அதை வேடிக்கை பார்த்தப்படி சாதாரணமாகக் கடந்து சென்றுள்ளனர். ஸ்ரீதரை கடுமையாகத் தாக்கிய கும்பல் ஸ்ரீதர் வைத்திருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கப் பணம், நகை மற்றும் செல்போனைப் பிடுங்கி சென்றனர்.

அந்தக் கும்பல் தப்பி ஓடிய பின்னர் அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் புழல் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த புழல் போலீஸார் ரத்த வெள்ளத்தில் கிடந்த டிரைவர் ஸ்ரீதரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

ஸ்ரீதரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டு தப்பிச் சென்ற மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வந்தனர். சாலையில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவைச் சோதித்தபோது ஓட்டுநர் ஸ்ரீதரைத் தாக்கும் காட்சிகள் தெரிந்தன. சிசிடிவி காட்சிகள் மூலம் வழிப்பறி கொள்ளையர்களைப் போலீஸார் தேடி வந்தனர்.

சிசி டிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், 5 பேரில் ஒருவர் ஏற்கெனவே வழிப்பறியில் ஈடுபட்டு சிக்கிய வியாசர்பாடி பிவி காலனியைச் சேர்ந்த ராஜிவ் (19) எனத் தெரிய வந்தததன் பேரில் அவரை போலீஸார் பிடித்தனர். ராஜிவுடன் 4 பேர் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

ராஜிவ் கொடுத்த தகவலின் பேரில்  வியாசர்பாடியைச் சேர்ந்த பாலா (எ) பாலசுப்ரமணி (19), வியாசர்பாடி காவங்கரையைச் சேர்ந்த நாகராஜ் (18) ஆகிய இருவர் உட்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். இதில் இருவர் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள்.

சமீபகாலமாக மது, போதைப்பழக்கம் இளம் பருவத்தினரிடையே அதிகரித்து வருகிறது. இதனால் அதை வாங்கப் பணம் வேண்டும் என்பதற்காக எதைப்பற்றியும் கவலைப்படாமல் வழிப்பறியில் ஈடுபடுகின்றனர் என போலீஸார் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT