தமிழகம் முழுவதும் கடுமையான குளிர் அலை வீசி வருவதற்கான காரணம் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது
இலங்கை தரைப்பகுதியில் நேற்று காற்றழுத்த சுழற்சி நீடித்தது. இதுமட்டுமில்லாமல் சோமாலியா அருகே கடல் பகுதியில் காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இது காஷ்மீ்ர் பகுதியில் நிலவி வரும் குளிர் அலையை ஈர்க்கிறது. வட இந்தியா வழியாக எதிர் காற்றழுத்த சுழற்சியால் ஈர்க்கப்படுகிறது.
இது வட இந்தியாவை கடந்து தமிழக கடலோரப்பகுதி வழியாக பயணித்து பாக் ஜலசந்தி, மன்னார் வளைகுடா வழியாக சோமாலிய காற்றழுத்த சுழற்சியால் ஈர்த்து செல்லப்படுகிறது. இதனால் தமிழக கடலோரப்பகுதிகளில் குளிரை ஈர்த்து காற்று செல்கிறது. காலை நேரத்தைவிடவும் பகல் பொழுதில் காற்றின் வேகம் சற்று கூடுதலாக உள்ளது.
இந்த காற்றின் வேகத்தை பார்த்து மீனவர்கள் அச்சப்படுகின்றனர். அச்சப்பட வேண்டாம். அடுத்த இரு நாட்களில் இந்த பனி குறைய வாய்ப்புள்ளது. அப்போது காற்றின் வேகமும் குறையும். மேலும் அந்தமான் அருகே காற்றழுத்த சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. அப்போது இந்த குளிர் அலை குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.