லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீது பெண் எஸ்பி அளித்த பாலியல் புகாரை சிபிசிஐடி விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறையில் ஐஜி-யாக இருப்பவர் முருகன், மீது பாலியல் தொல்லை தருவதாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெண் எஸ்.பி. ஒருவர் பாலியல் புகார் எழுப்பினார். இதையடுத்து முதல்வரின் தனிப்பிரிவு, தமிழக டிஜிபி, உள்துறை செயலர் உள்ளிட்டோரிடம் புகார் அளித்திருந்தார். இதற்கிடையில், பாலியல் தொல்லை கொடுத்த ஐ.ஜி.-யையும், தன்னையும் வெவ்வேறு இடங்களுகு இடமாற்றம் செய்யக்கோரி பெண் எஸ்.பி. வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் உள்துறை கட்டுப்பாட்டில் உள்ள டிஜிபி அமைத்த உட்புகார் விசாராணை குழு, ஐ.ஜி.-க்கு எதிரான புகாரை சிபிசிஐடி விசாரிக்க பரிந்துரைத்தது. அதனடிப்படையில் ஆரம்பகட்ட விசாரணை முடிந்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு துறை என்பது பொதுத்துறையின் கீழ் வருவதால், உள்துறையின் கீழ் செயல்படும் டிஜிபி அலுவலகம் அமைத்த உட்புகார் குழு தனக்கு எதிரான புகாரை விசாரிக்க முடியாது என்றும், அதன் பரிந்துரையிலான சிபிசிஐடி விசாரணையை ரத்து செய்ய வேண்டுமென ஐ.ஜி. முருகன் வழக்கு தொடர்ந்தார்.
இதற்கிடையில், இந்த விவகாரம் தொடர்பாக பிரேம் ஆனந்த் என்பவர் பொது நல வழக்கும் தொடர்ந்தார் இந்த வழக்குகளை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஹுலுவாடி ஜி. ரமேஷ் தலைமையிலான அமர்வு சிபிசிஐடி விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து கடந்த ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி உத்தரவிட்டனர்.
பின்னர் அந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் வினித் கோத்தாரி, அனிதா சுமந்த் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், சிபிசிஐடி விசாரணை விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளனர். மேலும், பொது நல வழக்கை தள்ளுபடி செய்வதாகவும், ஐ.ஜி. மற்றும் எஸ்.பி. ஆகியோர் தொடர்ந்த வழக்குகளை தனி நீதிபதி விசாரிக்க பரிந்துரைத்து, தலைமை நீதிபதி கவனத்துக்கு அனுப்புவதாக உத்தரவிட்டனர்.