தமிழகம்

மருந்துகளை விநியோகிப்பதில் கவனம் தேவை: மருந்தாளுநர்களுக்கு அறிவுரை

செய்திப்பிரிவு

ஒரே மாதிரியான பெயரைக்கொண்ட மாத்திரைகள் உள்ளன. அவற்றை விநியோகிக்கும்போது விழிப்புடன் இருக்க வேண்டும் என்று மருந்தாளுநர்களுக்கு தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினார்.

‘உலக மருந்தாளுநர் தினம்’ நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருந்தாளுநர்கள் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதில் தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, ‘‘சுகாதாரத்துறை என்பது மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள் என அனைவரும் இணைந்து கூட்டாக செயலாற்றும் துறையாகும். இந்தத் துறையில் மருந்தாளுநர்களின் பணி போற்றத்தக்க ஒன்று. மருந்துகளை நோயாளிகளிடம் வழங்கும்போது, அவற்றை எப்படி உட்கொள்வது என்பது குறித்து மருந்தாளுநர்கள் விளக்கிக் கூற வேண்டும். இன்டெனால், இன்சிடால் போன்ற ஒரே மாதிரியான பெயரைக்கொண்ட மாத்திரைகள் பல உள்ளன. அவற்றை விநியோகிக்கும்போது விழிப்புடன் இருக்க வேண்டும்’’ என்றார்.

தமிழ்நாடு மருத்துவப்பணிகள் கழக நிர்வாக இயக்குநர் அபூர்வா கூறும்போது, “மற்ற பணிகளைவிட மருந்தாளுநர் பணி, அதிக சேவைத் தன்மை கொண்டதாகும். எனவே, இப்பணியில் ஈடுபடுபவர்கள் பெருமிதத்துடன் செயல்படலாம்” என்றார்.

நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை சிறப்பு செயலர் செந்தில்குமார், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை சிறப்பு அதிகாரி ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT