தமிழகம்

சயான், மனோஜ் சம்மனை ரத்துசெய்யக் கோரும் மனு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

செய்திப்பிரிவு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஊட்டி நடுவர் நீதிமன்றம் அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரிய சயன், மனோஜ் தொடர்ந்த மனு வாபஸ் பெறப்பட்டதால் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைதாகி ஜாமீனில் இருக்கும் சயான், மனோஜ் உள்ளிட்டோருக்கான ஜாமீனை ரத்துச் செய்யக்கோரி போலீஸ் தரப்பில் தாக்கல் செய்த மனுவில் ஜாமீனை ரத்துச் செய்ய மறுத்த ஊட்டி நடுவர் நீதிமன்றம்  இருவரையும் ஜன.29 அன்று ஆஜராக அனுப்பிய சம்மனை ரத்து செய்ய கோரியும், நீதிமன்றத்தின் வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க கோரியும் சயன் மற்றும் மனோஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் முன் இன்று  விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் சயன் மற்றும் மனோஜ் ஆகியோருக்கு வழங்கிய ஜாமினை ரத்து செய்ய கோரி தமிழக காவல்துறை தொடர்ந்த மனுவில் சயன் மற்றும் மனோஜ் ஆகியோர் தேரில் ஆஜராக ஊட்டி நடுவர் நீதிமன்றம் கடந்த 24-ம் தேதி சம்மன் அனுப்பியுள்ளது.

ஏற்கனவே 20 முறைக்கு மேல் இந்த வழக்கிற்காக நேரில் ஆஜராகியுள்ளதால் இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.  இதனை ஏற்க மறுத்த நீதிபதி, இந்த வழக்கு குற்றச்சாட்டு பதிவு செய்யும் நிலையில் உள்ளது. ஆனால், திடீரென ஒரு நிருபர் இந்த வழக்கின் உள்வந்து விசாரணை நடத்துகிறார். சயன் மற்றும் மனோஜ் இந்த வழக்கை திசை திருப்ப பார்க்கின்றனர். இவை அனைத்தும் அவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் தான் நடந்தது.

அதேபோல், அவர்கள் ஜாமீன் பெறும் போது விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்குவேன், தேவைப்படும் போது நேரில் ஆஜராவேன் என்ற நிபந்தனையை ஏற்று கையெழுத்திட்டுள்ளனர். அவ்வாறு இருப்பின் நடுவர் நீதிமன்ற சம்மனை எப்படி ரத்து செய்ய முடியும் என நீதிபதி கேள்வி எழுப்பினார். உங்கள் கோரிக்கையை ஊட்டி நீதிமன்றத்தில் முன்வையுங்கள் என உத்தரவிட்டார்.

மனுதாரரின் கோரிக்கையை ஏற்க மறுத்த அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர், கொடநாடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை பத்திரிக்கையாளர் மேத்யூ சாமுவல் பேட்டி எடுத்தது சட்டத்துக்கு புறம்பானது. இது சாட்சிகளை மாற்ற நினைக்கும் செயல் என தெரிவித்தார்.

இதனையடுத்து, இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்றும் ஒருவேளை ஜாமீன் ரத்து செய்யப்பட்டால் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம் என நீதிபதி அறிவுறுத்தினார். மனுதாரர்கள் மனுவை வாபஸ் பெற்று கொண்டதால் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT