‘நக்கீரன்' இதழ் ஆசிரியர் மற்றும் நிர்வாகப் பிரிவு ஊழியர்களுக்கு எதிராக ஆர்எஸ்எஸ் பிரமுகர் தொடர்ந்த அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.
‘நக்கீரன்' இதழில் கடந்த 2014-ம் ஆண்டு பிரபல எழுத்தாளர் மனுஷ்ய புத்திரன் எழுதிய கட்டுரை வெளியானது. அதில், ஆர்எஸ்எஸ் இயக்கம் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவு செய்துள்ளதாகக் கூறி, ஆர்எஸ்எஸ் நிர்வாகியான தண்ட பாணி என்பவர் திருப்பூர் குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந் தார்.
இந்த வழக்கில் எதிர்மனு தாரர்களாக நக்கீரன் ஆசிரியர் கோபால் மற்றும் நிர்வாகப் பிரிவு ஊழியர்கள் சேர்க்கப் பட்டிருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த திருப்பூர் குற்றவியல் நீதிமன்றம், விசாரணைக்கு ஆஜராகும்படி நக்கீரன் கோபால் உள்ளிட்ட 5 பேருக்கு நோட்டீஸ் பிறப்பித்து இருந்தது. இதை எதிர்த்து நக்கீரன் கோபால் உள்ளிட்ட 5 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு நடந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் பி.டி.பெருமாள், சிவக்குமார் ஆகியோர் ஆஜராகி, ‘பத்திரிகையின் நிர்வாகப்பிரிவு ஊழியர்கள் மீது அவதூறு வழக்கு தொடர முடியாது. அவ்வாறு தொடரப்பட்ட வழக்கை திருப்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது சட்டப்படி தவறு’ என வாதிட்டனர்.
இதையடுத்து நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கு விசாரணைக்கு தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.