எம்எல்ஏ.க்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கும்போது, அரசு ஊழியரின் கோரிக்கையை உதாசீனப்படுத்துவது ஏன் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு கேள்வி எழப்பியுள்ளார்.
நாமக்கல்லில் முற்போக்கு உழவர் கூட்டமைப்பு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற நல்லகண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் புஞ்சை நிலங்களை அழித்துவிட்டு எட்டு வழிச் சாலை அமைக்கும் பட்சத்தில் கிராமங்களும், விவசாயமும் முற்றிலும் அழிந்து விடும். 8 வழிச் சாலை திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும். அரசு இத்திட்டம் குறித்து மறு பரிசீலனை செய்ய வேண்டும்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அரசு கைது செய்து சிறையில் அடைத்தது தவறு. அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும். அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால், போராட்டத்துக்கு மக்கள் ஆதரவு பெருகும்.
சட்டப்பேரவை உறுப் பினர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கும் அரசு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை உதாசீனப்படுத்துவது ஏற்புடைய தல்ல. அரசு அவர்களை உடனடி யாக அழைத்து பேசி சுமூகத் தீர்வு காண வேண்டும்.
விவசாய நிலங்கள் வழியாக உயர் மின் கோபுரம் அமைப்பதால் விவசாயிகள் பாதிப்புக்கு உள்ளாவார்கள். மின் கேபிள்களை பூமிக்கடியில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் விவசாயிகளுக்கும், விவசாயம் சார்ந்த தொழில்களுக்கும் பயன் உள்ள எந்தவிதமான சாராம்சமும் இல்லை என்பது வேதனை அளிக்கிறது என்றார்.