தமிழகம்

கிண்டியில் செல்போனைப் பறித்து வாகனத்தை எட்டி உதைத்துவிட்டுச் சென்ற கொள்ளையர்கள்: இளம்பெண் காயம்

செய்திப்பிரிவு

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகம் அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணின் செல்போனைப் பறித்த மர்ம நபர்கள் அவரது வாகனத்தையும் எட்டி உதைத்ததால் கீழே விழுந்த அந்த இளம்பெண் காயமடைந்தார்.

அடையாறு காமராஜர் நகர் முதல் அவென்யூவில் உள்ள தனியார் பெண்கள் விடுதியில் தங்கி இருப்பவர் தேவி (29). இவர் கிண்டியில் உள்ள தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று முன் தினம் இரவு பணி முடித்து இரவு 10 மணி அளவில் அடையாறில் உள்ள விடுதிக்கு தன்னுடைய இரு சக்கர வாகனத்தில் ராஜ்பவன் வழியாக சர்தார் படேல் சாலையில் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது அவர் அருகில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்கள் அவர் கையிலிருந்த ரெட்மி செல்போனைப் பறித்தனர். ஓடும் வாகனத்தில் செல்போனைப் பிடுங்கிய அவர்களிடம் தேவி போராடியபோது அந்த நபர்கள் ஆத்திரத்துடன் தேவியின்  இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்தனர்.

இதனால் தேவி நிலைதடுமாறி ஓடும் வாகனத்திலிருந்து கீழே  விழுந்தார். அவரைக் கீழே தள்ளிவிட்ட அந்த நபர்கள் செல்போனுடன்  மாயமானார்கள். ஓடும் வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் காயமடைந்த தேவியை அவ்வழியாக வந்த வாகன ஓட்டி ஒருவர் மீட்டு அருகிலுள்ள தனியார்  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார்.

கீழே விழுந்ததில் முகம், கை, கால், நெற்றியில் காயம் ஏற்பட்ட தேவி சிகிச்சைக்குப் பின் விடுதிக்குத் திரும்பிச் சென்றார். இதுகுறித்து நேற்று காலை தேவி கோட்டூர்புரம் போலீஸில் புகார் அளித்தார். அதன்பேரில் கோட்டூர்புரம் போலீஸார் ஐபிசி 392 (வழிப்பறி), 394 (வழிப்பறி செய்து காயத்தை உண்டாக்குதல்) ஆகிய பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 3 நாட்களுக்கு முன் அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை நிறுவிய காவல் ஆணையர் மூன்றாவது கண் காரணமாக குற்ற எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கூறிய நிலையில் அதே பகுதியில் ஓடும் வாகனத்தில் பெண் ஒருவரைத் தாக்கி அவரது வாகனத்தை எட்டி உதைத்து விட்டு செல்போனை மர்ம நபர்கள் பறித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT