தமிழகம்

ஸ்டெர்லைட் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை

செய்திப்பிரிவு

ஸ்டெர்லைட் வழக்கு விசார ணையை இன்றைக்கு (ஜன. 30) தள்ளிவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடியில் போலீஸ் துப் பாக்கிச் சூடு சம்பவத்தை தொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூடியது. இதனை எதிர்த்து ஆலை நிர்வாகம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மனு, நீதிபதிகள் ஆர்.பாலி நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இம்மாதம் 8-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்ற தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து மதுரை உயர் நீதிமன்ற கிளை பிறப்பித்த உத்தரவையும் நிறுத்தி வைத்தது.

இடைக்கால மனு

தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவின்படி, ஆலையை திறக்க உடனடியாக அனுமதி வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி, வேதாந்தா குழுமம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி இடைக்கால மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.பாலி நாரிமன், நவீன் சின்ஹா ஆகியோர் முன் கடந்த 24-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அன்றைய தினம் வாதம் முழுமையாக முடிவடையாததால், வழக்கின் வாதம் நேற்று தொடர்ந்தது.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன் வாதிடும்போது, “தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட பிறகும், வேதாந்தா குழுமம் விதிகளை பின்பற்றவில்லை.

இந்த ஆலையால் நிலத்தடி நீர் கடுமையாக மாசடைந்துள்ளது. அதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஸ்டெர்லைட் நிறுவனத்தின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்” என வாதிட்டார்.

இன்று காலை 10.30 மணிக்கு வாதம் தொடர்ந்து நடைபெறும் எனக் கூறி, வழக்கை இன்றைக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT