தமிழகம்

தமிழகத்தில் 12, 13 தேதிகளில் குளிர் கூடுதலாக இருக்கும்: வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணிப்பு

செய்திப்பிரிவு

தமிழகத்தில் வரும் சனிக்கிழமை (12-ம் தேதி) மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குளிரின் அளவு அதிகமாக இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் செல்வகுமார் கணித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது

வங்கக்கடலில் செயலிழந்து நீடித்துக் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேலும் செயலிழந்து மியான்மர் அருகே நீடித்துக் கொண்டிருக்கிறது. அது அங்கேயே முற்றிலும் மறைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் மையப்பகுதியில் நீடித்துக் கொண்டிருந்த உயரழுத்தம் வடக்கு நோக்கி நகர்ந்து வருகிறது.

அது தற்போது காஷ்மீர் அருகே நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக கடந்த சில தினங்களாக தமிழகத்தில் நீடித்து வந்த குளிர் சற்று குறைந்துள்ளது. ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களிலும் கூட இன்று இரண்டு டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் குறைந்துள்ளது. அதேசமயம் பனிப்பொழிவு நீடித்து வருகிறது. பனிப்பொழிவு அதிகரித்து இருப்பதால் மேகங்கள் உருவாவது குறைந்து வெயிலின் அளவு சிறிது அதிகரித்துள்ளது. அடுத்த சில நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும்.

நிலநடுக்கோட்டு இந்திய பெருங்கடல் அருகே காற்றழுத்த சுழற்சி ஒன்று நிலவி வருகிறது. இது, வரும் 12-ம் தேதி இலங்கைக்கு தெற்கே நகர்ந்து வரும். இதனால் தமிழகத்துக்கு மழை வாய்ப்பு ஏதும் இல்லை. எனினும் இதன் காரணமாக மேகக்கூட்டங்கள் அதிகரித்து தமிழகத்தின் ஊடாக குளிர்ந்த காற்று வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக வரும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குளிரின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும். இரவு நேரங்களில் சற்று கூடுதலாக குளிர் இருக்கும். தமிழகம் முழுவதுமே பரவலாக சற்று குளிர் கூடுதலாகவே இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT