தமிழகம்

அரசு பொது மருத்துவமனையில் நவீன முறையில் முதியவருக்கு இதய ரத்தக்குழாய் மாற்று சிகிச்சை

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூரைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (69). பால் வியாபாரி. மூச்சுத் திணறல், இதய வலியால் அவதிப் பட்ட அவர் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டார். டாக்டர்கள் பரிசோ தனை செய்ததில், அவருடைய இதயத்தில் அயோர்டிக் வால்வு சுருங்கி இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்த னர். ஆனால் அவருக்கு ஆஸ்துமா நோய் இருந்த தால், அறுவை சிகிச்சை மேற் கொள்வது சிக்கலை ஏற்படும் என்ற சூழல் இருந்தது.

இதைத்தொடர்ந்து இதய சிகிச்சை நிபுணர்கள் டாக்டர்கள் ஜி.ஞானவேல், என்.சுவாமிநாதன், சிசிலி மேரி மெஜில்லா, ரவிசங்கர் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்தனர். அவருடைய தொடையில் நுண்துளையிட்டு பலூன் குழாய் மூலம் செயற்கை வால்வு மகாதமணி வாயிலாக இதயத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சுருங்கியிருந்த வால்வுக்கு பதிலாக பொருத்தப்பட்டது. சிகிச்சைக்குப் பின்னர் அவர் நலமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மருத்துவமனை டீன் ஜெயந்தி கூறும்போது, “இந்த மருத் துவமனையில் இந்த சிகிச்சையை முதல் முறையாக செய்திருக்கிறோம். சிகிச்சை முடிந்த மறுநாள் வீட்டுக்குச் செல்ல முடியும். இந்த சிகிச்சையை முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனையில் இந்த சிகிச்சைக்கு ரூ.15 லட்சம் வரை செலவாகும்” என்றார்.

SCROLL FOR NEXT