தூத்துக்குடி மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலில் வெளிமாவட்டங் களைச் சேர்ந்தவர்கள் கள்ள ஓட்டு போட்டதை தடுக்க முயன்ற பாஜக வேட்பாளர் தாக்கப்பட்டார். இதனை கண்டித்து பாஜக-வினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி மேயர் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நேற்று நடைபெற்றது. 250 வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி யது. திரேஸ்புரம் உள்ளிட்ட ஒருசில பகுதிகளில் மட்டும் வாக்குச் சாவடிகளில் வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். மற்றப்படி அனைத்து வாக்குச் சாவடிகளும் கூட்டமில்லை. வெளிமாவட்டத்தினர்
மதியத்துக்கு மேல் பல வாக்குச் சாவடிகளில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் கள்ளஓட்டுப் போடுவதாக புகார் எழுந்தது. இதை யடுத்து உஷாரான பாஜக-வினர் அந்த வாக்குச்சாவடிகளுக்குச் சென்று அவர்களை தடுத்ததால், அதிமுக-வினருக்கும், பாஜக-வினருக்கும் மோதல் ஏற்பட்டது.
சாலை மறியல்
தூத்துக்குடி பூபாலராயர்புரம் பனை பொருள் கூட்டுறவு சங்க வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடியில் வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கள்ள ஓட்டு போடுவ தாக தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி, அவரது கணவர் கனகராஜ் உள்ளிட்ட பாஜக-வினர் மாலை 3 மணியளவில் அங்கு வந்தனர். அப்போது அதிமுக மற்றும் பாஜக ஆகிய இருதரப்பி னருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதைக் கண்டித்து பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி தலைமை யில் அக்கட்சியினர் சாலை மறியல் செய்தனர். அப்போது அங்கு வந்த ஏஎஸ்பி அருண் சக்திகுமாரிடம் ஜெயலட்சுமி எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தார்.
வேட்பாளர் மீது தாக்குதல்:
திரவியபுரம் டிடிடிஏ நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியிலும் வெளிமாவட்டத்தைச் சேர்ந்த சிலர் வாக்களிக்க முயன்றதை அறிந்த பாஜக-வினர், அங்கே விரைந்து சென்று அவர்களைத் தடுத்தனர். இதனால்அங்கிருந்த அதிமுக-வினரும், பாஜக-வினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி, அவரது கணவர் கனகராஜ் ஆகியோர் தாக்கப்பட்டனர். வேட்பாளரின் கையில் காயம் ஏற்பட்டது.
பாஜக-வினர் திரவியபுரம் பிரதான சாலையில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து ஏஎஸ்பி அருண் சக்திகுமார், சார் ஆட்சியர் கோபால சுந்தரரராஜ், வட்டாட்சியர் கிருஷ்ணன், ஏடிஎஸ்பி கந்தசாமி உள்ளிட்டோர் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் பாஜக-வினர், சம்பந்தப்பட்ட நபர்களை உடனடியாக கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மறுத்துவிட்டனர். அதன் பேரில் வாக்குச்சாவடியில் இருந்த தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத் தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவரை மட்டும் போலீஸார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அப்போதும் பாஜக-வினர் சமாதானம் அடையவில்லை.
இதையடுத்து அங்கு வந்த பாஜக மாவட்டத் தலைவர் கனகராஜ் பாஜக-வினரை சமாதானப்படுத்திய பிறகு அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.
வேட்பாளர் மயங்கினார்
இந்நிலையில் பாஜக வேட்பாளர் ஜெயலட்சுமி திடீரென மயங்கி விழுந்தார். கூட்டத்தில் பரபரபப்பு ஏற்பட்டது. மயங்கியவரை அவரது கணவர் தூக்கிச் சென்று காரில் ஏற்றி தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அதன் பிறகு பாஜக-வினர் படிப்படியாக அங்கிருந்து கலைந்து சென்றனர்.
தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி எஸ்டிஏ பள்ளி உள்ளிட்ட பல வாக்குச்சாவடியிலும் இதே காரணத்துக்காக அதிமுக பாஜக இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. போலீஸார் சமாதானம் செய்து வைத்தனர்.
மொத்தத்தில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு மதியம் வரை அமைதியாகவும், மந்தமாகவும் நடைபெற்றது. மதியத்துக்கு மேல் வன்முறைக்கு மாறியது.