குஜராத் கலவரத்தின்போது கணவர்களை இழந்த, ஆதரவற்ற முஸ்லிம் பெண்கள் மீது கருணை காட்டாத பாஜக, முத்தலாக் சட்டம் மூலம் நீலிக்கண்ணீர் வடிக்கிறது என, மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எம்.ஹெச்.ஜவாஹிருல்லா இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், "நாடாளுமன்றத்தின் மக்களவையில் வியாழக்கிழமை பெரும்பாலான கட்சிகள் எதிர்த்த நிலையில் முத்தலாக் சட்டத்தை நிறைவேற்றியதற்காக ஆளும் மத்திய பாஜக அரசை மனிதநேய மக்கள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
முத்தலாக் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என்றும் அரசியல் உள்நோக்கத்துடன் முஸ்லிம் சமுதாயத்தைப் பழிவாங்கும் நோக்கத்துடன் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும், உரிமையியல் (சிவில்) தொடர்பான பிரச்சினையை குற்றவியல் (கிரிமினல்) குற்றமாகக் கருதுவது பெரும் தவறு என்றும் முத்தலாக் மசோதா குறித்து மக்களவையில் அழுத்தமாக எதிர்ப்பை வெளிப்படுத்திய காங்கிரஸ், அதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சமாஜ்வாடி, ஆர்ஜேடி, பிஜேடி, தேசியவாத காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஏயூடிஎப் மற்றும் ஏஐஎம்ஐஎம் முதலிய கட்சிகளுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
முஸ்லிம் பெண்கள் மீதான அக்கறையின் காரணமாக இந்தச் சட்டத்தை பாஜக கொண்டு வரவில்லை. பிரதமர் நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது குஜராத் கலவரத்தின்போது கணவர்களை இழந்த, ஆதரவற்ற முஸ்லிம் பெண்கள் மீது கருணை காட்டாத கட்சி பாஜக.
மோடி பிரதமரான பிறகு முதலில் லவ் ஜிஹாத் என்ற பெயரிலும் தற்போது பசு பாதுகாப்பு என்ற பெயரிலும் முஸ்லிம்கள் மீது கும்பல் வன்முறை ஏவப்பட்டு அதனால் பாதிக்கப்பட்ட முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைப்பதற்கு கூட உரிய நடவடிக்கை எடுக்காத கட்சி பாஜக. முத்தலாக் சட்டம் பெயரில் முஸ்லிம் பெண்களுக்கு நீதி செலுத்துகிறோம் என்ற பெயரில் பாஜக நீலிக் கண்ணீர் தான் வடிக்கின்றது என்பதை நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்துள்ளார்கள்.
முத்தலாக் மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படும்போது பாஜகவின் கெட்ட நோக்கம் நிறைவேறாமல் இம்மசோதாவை எதிர்த்து வாக்களிக்க வேண்டும்" என எம்.ஹெச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.