இந்துஸ்தான் வர்த்தக சபையின் 68-வது ஆண்டுக் கூட்டம் சென்னை யில் நேற்று நடந்தது. விழாவை மத்திய தொழில் வர்த்தகத் துறை இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிவைத்துப் பேசினார். அவர் கூறியதாவது:
பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கவும், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா’ (அனைத்தையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்வோம்) திட்டம் வெறும் முழக்கம் அல்ல. நாட்டின் பொருளா தார வளர்ச்சியை மீட்டெடுப்பதற் கான ஒரு செயல் திட்டம்.
ஜவுளி, தோல் பொருள், ஆட்டோமொபைல், எலெக்ட் ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம் உட்பட 25 முக்கிய துறைகளில் மேலும் தாராளமயம் கொண்டுவரப்படும். அதற்கேற்ப தொழிலாளர் சட்டங்கள் திருத்தப்படும். தொழில் துறையை மேம்படுத்தும் வகையில் உள்கட்டமைப்பு, தகவல்தொடர்பு கட்டமைப்புகளில் அதிக கவனம் செலுத்தப்படும். தற்போதைய அனுமதி விண்ணப்ப நடைமுறை கள் மாற்றப்படும். முதலீட்டுக்கு உகந்த சூழல் உருவாக்கப்படும்.
கம்பெனிகள் சட்டம் 2013-ல் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாக தொழில் துறையினர் புகார் தெரிவித்தனர். அந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கம்பெனிகள் சட்டத்தில் விரைவில் திருத்தம் கொண்டுவரப்படும்.
விண்வெளி உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பங்களில் தரத்தில் எந்த சமரசமும் செய்யாமல் நம்மால் செயல்பட முடியும் என்பதை நிரூபித்துள்ளோம்.
இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.
கூட்டத்தில் இங்கிலாந்து துணை தூதர் பரத் ஜோஷி, காக்னிசன்ட் டெக்னாலஜி சொல்யூஷன்ஸ் இந்தியா (சிடிஎஸ்) நிறுவன துணை செயல் தலைவர் ஆர்.சந்திர சேகரன் உட்பட பலர் பேசினர்.