அதிமுக - அமமுக இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் டி.ஜெயக்குமார், தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
நெல்லையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமமுக கொள்கை பரப்புச் செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன், ‘‘அதிமுக - அமமுக பிரிந்திருந்தால் பலவீனம். தமிழகத்தில் திமுக - காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றுவிடும் என்பதால், இரு கட்சிகளும் இணைய வேண்டும் என்று பாஜக நினைப்பதாக செய்திகள் வருகின்றன. இது நல்ல சூழல்தான்.
இணைந்தால் நல்லதுதான்’’ என்றார். இதுபற்றி கருத்து தெரிவித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, ‘‘தங்க தமிழ்ச்செல்வன் கூறுவது அவரது கருத்து. இணைவதற்குண்டான வழியைத் தான் அவர் மறைமுகமாக சொல் கிறார்’’ என்றார்.
இந்நிலையில்,சென்னையில் மூதறிஞர் ராஜாஜி பிறந்த தின நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறியதாவது:
தங்க தமிழ்ச்செல்வனுக்கு ஆசை இருக்கிறதுபோல தெரிகிறது. அவர் வரட்டும். கட்சித் தொண்டர்களுக்கு ஏற்கெனவே ஒருங்கிணைப்பாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இது மிகப்பெரிய இயக்கம். கடல் போன்ற இயக்கத்தில் நதிகள் வந்து சேர்வதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால் தினகரன், சசிகலா மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்களை சேர்ப்பது எந்த காலத்திலும் நடக்காது. அதிமுகவுடன் அமமுக இணைவது என்பது இமயமலையுடன் காளான் இணைவது போன்றது. அந்தப் பேச்சுக்கே அர்த்தமில்லை.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தினகரனின் தீவிர ஆதரவாளரான முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேல் கூறும்போது, ‘‘எந்தச் சூழ்நிலையிலும் அதிமுகவில் அமமுக இணையாது. தங்க தமிழ்ச்செல்வன் வருவோர் வாருங்கள் என்றுதான் பேசினார். நாங்கள் எந்தச் சூழலிலும் அவர்கள் பக்கம் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. எம்எல்ஏகூட இல்லாத நாங்கள் ஏன் அங்கு சேரப்போகிறோம். இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தவும் இல்லை’’ என்றார்.தினகரன், சசிகலா மற்றும் அவர்களைச் சேர்ந்தவர்களை சேர்ப்பது எந்த காலத்திலும் நடக்காது. அதிமுகவுடன் அமமுக இணைவது என்பது இமயமலையுடன் காளான் இணைவது போன்றது. அந்தப் பேச்சுக்கே அர்த்தமில்லை.