தமிழகம்

மேகதாது அணை விவகாரம்: வியாழக்கிழமை சிறப்பு சட்டப்பேரவை கூட்டம்

செய்திப்பிரிவு

மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்க வியாழக்கிழமை (டிசம்பர் 6-ம் தேதி) சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தைக் கூட்ட ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.

கர்நாடக மாநிலம் மேகதாது என்ற இடத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.5,912 கோடி செலவில் புதிய அணை கட்டுவதற்கான கர்நாடக அரசின் வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.

இதன்மூலம் மேகதாது அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை கர்நாடக அரசு மேற்கொள்ள முடியும். தமிழக நலனுக்கு எதிரான இந்த அனுமதியை அனைத்து எதிர்க்கட்சிகளும் கண்டித்துள்ளன.

மேகதாது அணை கட்டுவதற்கான வரைவுத் திட்டத்திற்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது தமிழக அரசுக்கு எதிரான மத்திய, மாநில அரசுகளின் கூட்டுச் சதி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின.

மேகதாது அணை கட்டுவதற்கான ஆய்வுகளுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கும் என்பது சில மாதங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. இதுகுறித்து தமிழக அரசு பலத்த எதிர்ப்பைக் காட்டாததால் மத்திய அரசு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மேகதாது அணை கட்டுவதற்கான முதற்கட்ட ஆய்வுகளுக்கு மத்திய நீர்வள அமைச்சகம் அனுமதி அளித்திருப்பது உச்ச நீதிமன்றம் மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகளுக்கு எதிரான செயல் ஆகும்.

கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை நதிகளின் குறுக்கே இப்போதுள்ள அணைகளின் கொள்ளளவு 104.59 டிஎம்சி ஆகும். இவ்வளவு கொள்ளளவுள்ள அணைகள் இருக்கும் போதே கர்நாடக அரசு தமிழகத்துக்கு தண்ணீர் தருவதில்லை. 67.14 டிஎம்சி கொள்ளளவுள்ள மேகதாது அணையும் கட்டப்பட்டால் கர்நாடக அணைகளின் கொள்ளளவு 171.73 டிஎம்சியாக அதிகரிக்கும்.

மேட்டூர் அணை கொள்ளளவை விட கிட்டத்தட்ட இரு மடங்கு தண்ணீரை கர்நாடகம் தேக்கி வைத்தால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது. காவிரி பாசன மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டு பாலைவனமாகிவிடும்.

எனவே, மேகதாது அணை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுகளுக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இந்த விஷயத்தில் அரசு முடிவு எடுக்கும் வரை காத்திராமல்  இந்த அனுமதியை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்குத் தொடர வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் மத்திய மாநில அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து திமுக தலைமையில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை இன்று திருச்சியில் நடத்தியது. இந்நிலையில் சட்டப்பேரவையைக் கூட்டி தீர்மானம் போடவும் கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து சட்டப்பேரவை தலைவர் தனபால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்ட அரசு முடிவெடுத்தது.

இதற்கான அறிவிப்பை ராஜ்பவனிலிருந்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிறப்பித்துள்ளார். வரும் டிசம்பர் 6-ம் தேதி (வியாழக்கிழமை) மாலை 4 மணிக்கு சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நடக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT