தமிழகம்

புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின் கட்டணம் ரத்து குறித்து ஆலோசனை

செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி பகுதியில் நேற்று மின் சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர் பி.தங்கமணி, செய்தியாளர்களிடம் கூறியது: “புயலால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை நகர் பகுதியில்  100 சதவீதம் மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கிராமப்பகுதியில் 80 சதவீதம் மின் விநியோகம் வழங்கப்பட்டு விட்டது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் தஞ்சாவூர் நகரில் முழுவதுமாக மின் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. கிராமப் பகுதியில் 40 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் கிராமப் பகுதியில் சீரமைப்புப் பணி நடைபெற்று வருகிறது. நாகப்பட்டினத்தில் வேதாரண்யம் பகுதியில் மட்டும் மின்சாரம் வழங்க வேண்டியுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் ஒரு வாரத்துக்குள் 100 சதவீதம் மின் விநியோகம் செய்யப்படும். புயல் பாதித்த மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்துவதற்கு 5-ம் தேதி வரை கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இம்மாவட்டங்களில் மின் கட்டணத்தை ரத்து செய்வது தொடர்பாக தமிழக முதல்வருடன் கலந்துபேசி நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டு மென கோரிக்கை விடுத்து வருகின்றனர். பேரிடர் காலங்களில் இவர்களது பணியை நாங்கள் கண்கூடாக பார்த்து வருகிறோம். இவர்களின் தினக் கூலியை உயர்த்தி வழங்குவது குறித்து பரிசீலனை செய்யப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT