தமிழகம்

அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜனவரி 15, 16, 17 தேதிகளில் ஜல்லிக்கட்டு நடத்தப்படும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு

செய்திப்பிரிவு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 15, 16, 17 தேதிகளில் மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் ஜல்லிக் கட்டு போட்டிகளை நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங் களில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடப்பது வழக்கம். முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில் இப்போட்டிகளை நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. இதை எதிர்த்து கடந்த 2017 ஜனவரியில் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய போராட்டம் வெடித்தது. சென்னை மெரினா கடற்கரையில் லட்சக்கணக்கானோர் திரண்டு பல நாட்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபோல மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை என தமிழகத்தின் அனைத்து முக்கிய நகரங்களிலும், மாவட்டங்களிலும் பொது இடங்களில் லட்சக்கணக்கில் மக்கள் திரண்டு ஜல்லிக்கட்டு தடையை நீக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வரலாறு காணாத இந்தப் போராட்டத்தால் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வகை செய்யும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் சட்டம் இயற்றப்பட்டது.

அதற்கு ஓரிரு நாளில் குடியரசுத் தலைவரின் ஒப்புதலை மத்திய அரசு பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு உற்சாகமாக நடந்து வருகின்றன.

இந்நிலையில் வரும் 2019-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த மாவட்ட வாரியாக தமிழக அரசு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் வரும் ஜனவரி 15-ம் தேதி அவனியாபுரம், 16-ம் தேதி பாலமேடு, 17-ம் தேதி அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான அரசாணையை தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை கடந்த 24-ம் தேதி வெளியிட்டுள்ளது.

நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி

உச்ச நீதிமன்றமும், விலங்குகள் நல வாரியமும் வகுத்துள்ள கட்டுப்பாடுகள், விதிகளைப் பின்பற்றி காளைகளுக்கு எவ்வித துன்புறுத்தலும் இல்லாமல் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என்றும் பார்வையாளர்களுக்கு எவ்வித ஆபத்தும் ஏற்படாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT