தமிழகம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கழிப்பறை வசதிகளை கண்காணிக்க கோரி வழக்கு - மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் முறையாக உள்ளதா என்பதை கண்காணித்து உறுதி செய் யக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் பூஞ்சேரி யில் உள்ள அரசு உதவிபெறும் ஆர்சி நடுநிலைப் பள்ளியில் மாணவர்கள் சுழற்சி முறையில் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுவதாக கூறி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பிரமுகரான எம்.தியாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த அக்டோபர் 16-ம் தேதி வழக்கு தொடர்ந்தார்.

‘கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் மாணவ - மாணவியரை ஈடுபடுத்தும் பள்ளி நிர்வாகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். காஞ்சிபுரம் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் முறையாக உள்ளதா என்பதை கண்காணித்து, உறுதி செய்ய தனியாக குழு அமைக்க உத்தரவிட வேண்டும். பள்ளிகளில் துப்புரவுப் பணியாளர்கள் பணி அமர்த்தப்பட்டுள்ளார்களா என்பது குறித்து பதிலளிக்க உத்தரவிட வேண்டும்’ என அவர் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோரைக் கொண்ட அமர்வு விசாரித்தது. இதுதொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்டக் கல்வி அதிகாரி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் ஜனவரி மாதம் 25-ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

SCROLL FOR NEXT