திருவண்ணாமலையில் சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட புகாரின்பேரில் கைது செய்யப்பட்ட போலி பெண் மருத்துவர் ஆனந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் கந்தசாமி உத்தர விட்டுள்ளார்.
திருவண்ணாமலை பொன்னு சாமி நகரில் செயல்பட்ட கிளீனிக்கில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யப்படுவதாக மருத்துவத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், கடந்த 2-ம் தேதி சென்னையில் இருந்து வந்த மருத்துவக் குழுவினர் அந்த கிளீனிக்கில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது போலி பெண் மருத்துவர் ஆனந்தி என்பவர் விதிகளை மீறி சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. கடந்த 10 ஆண்டுகளில் அவர் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கருக்கலைப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவர் ஏற்கெனவே இதே புகாரின்பேரில் கைதானவர் என்றும், ஆனால் தொடர்ந்து சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்யும் பணியில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, போலி மருத்துவர் ஆனந்தியையும் அவருக்கு உதவியாக இருந்த அவரது கணவர் தமிழ்செல்வன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் சிவக்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கருக்கலைப்பு செய்வதற்காகவே பிரத்யேக வசதிகளுடன் இருந்த கிளீனிக்குக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது. அந்த கிளீனிக்கை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபிசக்கரவர்த்தி ஆகியோர் பார்வையிட்டனர்.
இந்நிலையில், சட்டவிரோத கருக்கலைப்பில் ஈடுபட்ட போலி பெண் மருத்துவர் ஆனந்தியை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆட்சியர் கந்தசாமி நேற்று உத்தரவிட்டார். வேலூர் பெண்கள் தனிச்சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆனந்தியிடம் இது தொடர்பான உத்தரவின் நகலை வழங்கியதாக போலீஸார் தெரிவித்தனர். போலி பெண் மருத்துவர் ஆனந்தி என்பவர் விதிகளை மீறி சட்டவிரோதமாக கருக்கலைப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.