தமிழகம்

சேற்றை சேகரித்து தாமரையை மலர வைப்போம்: மீண்டும் தமிழிசை

செய்திப்பிரிவு

‘தாமரை மலர்ந்தே தீரும்’ என்கிற வசனத்தால் பிரபலமானவர் தமிழிசை. இது சம்பந்தமாக ஸ்டாலினுடன் வார்த்தைப்போரில் ஈடுபட்டுவந்த அவர் மீண்டும் தாமரையை மலரவைத்தே தீருவோம் என்று மீண்டும் சர்ச்சையை கிளறியுள்ளார்.

பாஜகவின் கட்சி சின்னம் தாமரை, இதை வெற்றிச்சின்னமாக மாற்றுவேன் என பொருள்படும்படி பாஜக தமிழக தலைவர் தமிழிசை எங்கு பேசினாலும் தாமரை மலரும் என்றும், தமிழகத்தில் தாமரை மலரும் என்றும் பேசுவது வழக்கம்.

அவரது பேச்சு வலைதளங்களில் நெட்டிசன்களால் கிண்டலடிக்கப்பட்டாலும், அவர் அப்படி கூறுவதை கைவிட்டதில்லை. இந்நிலையில் கடந்தவாரம் திமுக தலைவர் ஸ்டாலின் திருச்சி அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது ''தமிழகத்தைப் பற்றி மோடிக்கும், பாஜகவுக்கும் அக்கறை இல்லை. காரணம் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழகத்தில் காலூன்ற முடியாது என்பதால் ஓரவஞ்சனையுடன் பாஜக செயல்படுகிறது. தமிழகம் மீது இவர்களுக்கு அக்கறை இல்லை. எந்த முகத்தை வைத்துக்கொண்டு இங்கு தாமரை மலரும்? தமிழகத்தில் தண்ணீர் இல்லை. புல்கூட முளைக்காத சூழலில் தாமரை மலர்ந்துவிடுமா?  புல்லுக்கே வக்கில்லை தாமரை மலர்ந்திடுமாம்'' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த தமிழிசை “இனி மழைக்காலம் ஆரம்பம். மழை வந்தால் சூரியன் மறையும். குளம் நிறையும். தாமரை மலரும். செயற்கை மழை வரும் விஞ்ஞான காலம். ஊழல் விஞ்ஞானிகளை விரட்டியடிக்க செயற்கை மழைநீர் வரவைத்தாகிலும் குளங்களை நிரம்ப வைத்து தாமரையை மலரச் செய்வோம். காவிப்படை ரத்தத்தாலும் வியர்வையாலும் தாமரை மலரும்'' என்று பதிலளித்திருந்தார்.

 இதற்கு பதிலளித்திருந்த மு.க.ஸ்டாலின் “சகோதரி தமிழிசைக்கு ஒரு தகவல்: தாமரை மலர சூரிய சக்தி தேவை! சூரிய சக்தி நினைத்தால் தாமரையும் கருகும்!” என்று  தெரிவித்திருந்தார்.

மு.க.ஸ்டாலினின் பதிலளித்த தமிழிசை “அதிகாலையில்  சூரியன்  உதிப்பதற்குள் இதழ் விரித்து தாமரை மலர்கிறது.  இது அன்றாட நிகழ்வு ..மேக மூட்டத்தில் சூரியன் மறைந்தாலும் தாமரை மலரும். சூரிய சக்தி செடியில் இருக்கும் மலரைக் கருகச்செய்யும். குளத்து நீரில் மிதக்கும் தாமரையை கருகச் செய்யாது, கருகச் செய்யவும் முடியாது. இது இயற்கை நியதி”  என்று தெரிவித்தார்.

கஜா புயல் பாதித்த பகுதிகளுக்கு நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தபின்னர் பேட்டி அளித்த தமிழிசை மீண்டும் தாமரை மலரும் மேட்டருக்கு தாவினார். சேற்றை திரட்டியாவது செந்தாமரையை மலரவைப்போம் என்று தெரிவித்தார்,  அவர் பேட்டி: “புல் பூண்டு முளைக்காத இடத்தில் தாமரை எப்படி மலரும் என்று கேட்கிறார்கள். நாங்கள் பதில் சொல்லிவிட்டோம். எங்கள்மீது வீசப்படும் சேற்றை எடுத்து வைத்தாவது அந்தச்சேற்றில் செந்தாமரை மலரும்” என்று தெரிவித்து மீண்டும் தாமரை மலரும் விவாதத்துக்கு உயிரூட்டியுள்ளார்.

SCROLL FOR NEXT