தமிழகம்

தமிழகத்தில் எந்தக் கட்சி அலுவலகத்திலும் இல்லாத வகையில் 114 அடி உயரத்தில் திமுக கொடி: ஸ்டாலின் இன்று கொடியேற்றினார்

செய்திப்பிரிவு

அண்ணா அறிவாலயத்தில் 114 அடி உயரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள திமுக கட்சிக் கொடியினை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்தார்.

இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் சார்பாக இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், "திமுக தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் புதியதாக நிர்மாணிக்கப்பட்ட தமிழகத்தில் எந்தக் கட்சி அலுவலகத்தில் இல்லாத வகையில் 114 அடி உயரமும், 760 மி.மீ. விட்டமும்,  12*12 அடி அளவில் இரண்டு அடுக்கு கான்கிரீட் மேட்கள் அடிப்பகுதியும், 2,430 கிலோ எடையும், கம்பத்தில், 30 அடி அகலமும், 20 அடி உயரமும் கொண்ட கழகக் கொடியினை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஏற்றி வைத்தார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் கொடி ஏற்றும்போது மறைந்த தலைவர் கருணாநிதி எழுதிய 'செம்மொழியான தமிழ் மொழியாம்' எனும் பாடல் இசைக்கப்பட்டது.

இக்கொடிக்கம்பத்தில் பறக்கும் கொடி இரவிலும் தெரியும் வண்ணம் இரண்டு ஹைபீம் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளதோடு, கொடிமரப் பீடத்தில் அலங்கார விளக்குகள் டைமர் ஆட்டோமேட்டிக் சிஸ்டத்துடன் எரிந்து அணையும் வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின்போது திமுக பொருளாளர் துரைமுருகன், முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, துணை பொதுச்செயலாளர் வி.பி.துரைசாமி, உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

SCROLL FOR NEXT