போக்குவரத்துக்கு இடையூறாக நீண்ட நாட்களாக சாலையோரம் பழுதடைந்து கிடந்த 7,877 வாகனங் களை மாநகராட்சி நிர்வாகம் ஏலம் விட்டதில் ரூ.2 கோடியே 21 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட சாலை ஓரங்களில் போக்குவரத்துக்கு இடையூறாகவும், மழைநீர் தேங்கி டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையிலும் பழுதடைந்த வாகனங்கள் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த வாகனங்களை காவல்துறை உதவியுடன் மாநகராட்சி நிர்வாகம் கடந்த சில மாதங்களாக அப்புறப்படுத்தி வந்தது. அவ்வாறு மொத்தம் 7,877 வாகனங்கள் அகற்றப்பட்டன. அவை, எந்த வழக்குகளுடனும் சம்பந்தப்படவில்லை அல்லது எந்தவொரு நீதிமன்ற நடவடிக்கையிலும் நிலுவையில் இல்லை என காவல்துறையால் சான்று அளிக்கப்பட்டுள்ளன.
அதனைத் தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் சார்பில், அந்த வாகனங்களின் மதிப்பு ரூ.1 கோடியே 57 லட்சம் என நிர்ணயித்திருந்தது. பின்னர் அந்த வாகனங்கள் ஏலம் விடப்பட்டன. அதில் ரூ. 2 கோடியே 21 லட்சம் வருவாய் கிடைத்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.